மாசி சஷ்டி தினத்தில், வேல் கொண்டு நம்மைக் காத்தருளும் முருகக் கடவுளை வணங்குவோம். வேலுக்கு அரோகரா சொல்லி தரிசிப்போம். நம் வினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வெற்றிக்குமரன். காலையும் மாலையும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் ஸ்கந்த குரு கவசம் கேட்பதும் இல்லத்தில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் மனத்தெளிவையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாசி மாதம் என்பது வழிபாடுகளுக்கு உரிய மாதம். மாசி மாதம் என்பது நம் பாவங்களையெல்லாம் போக்கும் மாதம். மாசி மகம் எனும் அற்புத வைபவமும் இந்த மாதத்தில் உண்டு. மாசி பெளர்ணமியும் விசேஷமானது. அதேபோல் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை, மகா சிவராத்திரி என்று போற்றுகிறோம். இரவில் கண்விழித்து வணங்குகிறோம்.
மாசிக்கு நிகரில்லை என்பார்கள். மாசிக்கயிறு பாசி படியாது என்பார்கள். இத்தனை பெருமை மிகுந்த மாசி மாதத்தில், சஷ்டி திதியில் முருகனை தரிசிப்போம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டுவோம்.
முருகப்பெருமானுக்கு தை மாதத்தில் பூசம் விசேஷம். மாசிச் செவ்வாயும் சஷ்டியும் விசேஷம். பங்குனியில் உத்திரமும் வைகாசியில் விசாகமும் முக்கியமான நாட்கள். இந்த நாட்களில் ஆறுபடைவீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் கோயில்களிலும், சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.
மாதந்தோறும் வருகிற சஷ்டி ரொம்பவே விசேஷமானது. வழிபாட்டுக்கும் பூஜைக்கும் உரிய அற்புதமான மாதத்தில், சஷ்டி திதியில் முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வது எண்ணற்ற பலன்களைத் தரும்.
நாளைய தினம் 17ம் தேதி புதன்கிழமை சஷ்டி திதி. இந்த நாளில், அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று தரிசிப்போம். முருகக்கடவுளுக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்கி தரிசிப்பது இன்னும் விசேஷம். செவ்வரளி மலர்கள் சூட்டி மனதார வேண்டிக்கொள்வோம். வேண்டியதையெல்லாம் தந்தருளுவான் வேலவன்.
வீட்டில் உள்ள முருகப்பெருமானுக்கு மலர்கள் சூட்டி அலங்கரிக்கலாம். எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம். எதிரிகளை துவம்சம் செய்வார் வெற்றிக்குமரன். எதிர்ப்புகளையெல்லாம் அழித்தொழிப்பார் கந்தகுமாரன்!
காலையும் மாலையும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் ஸ்கந்த குரு கவசம் கேட்பதும் இல்லத்தில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் மனத்தெளிவையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.