திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயிலில் மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மண்ணை இட்டுக்கொண்டால், தீராத நோயும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். துஷ்ட சக்திகள் அனைத்தும் தலை தெறிக்க ஓடிவிடும் என்கிறார்கள்.
சப்த விடங்கத் தலங்கள் என்று திருவாரூரிலும் திருவாரூரைச் சுற்றிலும் இருப்பது போல், உபய விடங்கத் தலங்கள் என்றும் அமைந்துள்ளன.
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், சிங்கபெருமாள் கோயில் மற்றும் மறைமலைநகருக்கு அருகில் உள்ள திருக்கச்சூர் முதலான தலங்களைச் சொல்லுவார்கள். திருவான்மியூர் தலத்தையும் உபய விடங்கத் தலங்களைச் சொல்லுவார்கள். இந்த மூன்று திருத்தலங்களும், சாந்நித்தியமான திருத்தலங்கள் என்று ஸ்தல புராணங்கள் விவரிக்கின்றன.
தேவர்களும் முனிவர் பெருமக்களும் சோமாஸ்கந்தராக சிவனார் தரும் திருக்காட்சியைத் தரிசிக்க ஆவல் கொண்டார்கள். கடும் தவம் மேற்கொண்டார்கள். இதன் பலனாக, இந்தக் கோயில்களில், சிவபெருமான் விடங்கராகக் காட்சி தந்தருளினார். அதனால் இவை உபய விடங்கத் திருத்தலங்கள் என்று அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சப்த விடங்கத் தலங்கள் போல, உபய விடங்கத் தலங்கள் போல, பிரதிவிடங்கத் தலங்கள் என்றும் உள்ளன. மொத்தம் பதினேழு பிரதிவிடங்கத் திருத்தலங்கள் என்று உள்ளன.
அதாவது, நல்லூர், திருவீழிமிழலை, கீழ்வேளூர், திருக்கொட்டாரம், கச்சினம், அம்பர் மாகாளம், திருவாவடுதுறை, திருமலைராயன் பட்டினம், திருத்துறைப்பூண்டி, நாகூர், தஞ்சை தட்சணமேரு, தீபமாம்பாள்புரம், திருப்பைஞ்ஞீலி, பாரியூர், தொட்டிக்கலை, மேலையூர் முதலான தலங்களைச் சொல்லுவார்கள்.
உபய விடங்கத் தலமான திருக்கச்சூர், பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது. சிங்கபெருமாள் கோயிலில் இருந்தும் மறைமலைநகரில் இருந்தும் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திருக்கச்சூர். இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீகச்சபேஸ்வரர். தியாகாராஜ சுவாமி எனும் திருநாமமும் உண்டு.
சிற்ப நுட்பங்கள் கொண்ட இந்த சிவன் கோயிலில், வைஷ்ணவ சம்பிரதாயத்தை எடுத்துரைக்கும் விதமாக, சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன என்பது ஆச்சரியம்தான். கூர்மாவதாரக் காட்சி, ஸ்ரீஅனுமன், ஆதிசேஷன், காளிங்கநர்த்தனர், கல்கி அவதாரம் முதலான சிற்பங்கள், இங்கே உள்ள பதினாறு கால் கொண்ட மண்டபத் தூண்களில் காணக் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி, இதே மண்டபத்தின் தூண்களில் சைவசமயத்தைக் குறிக்கும் சிற்பங்களும் ஸ்ரீநடராஜ பெருமானின் ஊர்த்துவ தாண்டச் சிற்பமும் காளிதேவி, துர்காதேவி முதலானவர்களின் சிற்பங்களும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.
திருக்கச்சூர் திருத்தலம், சுந்தரருக்கு சிவனார் திருக்காட்சி தந்த தலம். ஆலமரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட திருத்தலம். மேலும் இந்தக் கோயிலை ஆலக்கோயில் என்று சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன என்கிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள்.
திருக்கச்சூர் திருத்தலத்தில், மாசி மாதத்தில் சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. திருக்கச்சூரில் இரண்டு சிவாலயங்கள் அருகருகே அமைந்திருப்பதும் சிறப்பு. கச்சபேஸ்வரர் - தியாகராஜர் கோயிலுக்குப் பின்புறம் மலையடிவாரத்தில் இன்னொரு சிவாலயம் இருக்கிறது. இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீமருந்தீஸ்வரர்.
இரண்டு திருத்தலங்களுமே சாந்நித்தியம் நிறைந்தவை. திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயிலில் மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மண்ணை இட்டுக்கொண்டால், தீராத நோயும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். துஷ்ட சக்திகள் அனைத்தும் தலை தெறிக்க ஓடிவிடும் என்கிறார்கள்.