காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பான வகையில் நடத்தப்படும் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீரங்கத்துக்கு இணையாகக் கருதப்படும், காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் 15 நாட்கள் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவ விழா தொடக்கமாக, கொடியேற்றம் இன்று (பிப்.16) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத நித்யகல்யாணப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிக் கம்பத்தின் அருகே எழுந்தருளினார்.
கொடிக் கம்பத்துக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை செய்யப்பட்டு, கருடக் கொடியேற்றப்பட்டது. முன்னதாக, கருடக் கொடி வீதியுலா நடைபெற்றது. இதில், கோயில் அறங்காவல் வாரிய நிர்வாகிகள், பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று (பிப்.16) மாலை சூரிய பிரபையில் பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது.
நாளை (பிப்.17) மாலை சந்திர பிரபையில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடத்தப்படும். பிப்.24-ம் தேதி தேரோட்டம், சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி, 27-ம் தேதி திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாளுடன் இணைந்து திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மகா தீா்த்தவாரி, மார்ச் 1-ம் தேதி தெப்போற்சவம், 2-ம் தேதி விடையாற்றி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. நாள்தோறும் யாகசாலை, திவ்யபிரபந்த சேவை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினர், நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினா் செய்துள்ளனர்.