ஆன்மிகம்

மாசி செவ்வாய் விசேஷம்; மங்காத செல்வம் தருவாள் சக்தி! 

வி. ராம்ஜி

மாசி மாதத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை ரொம்பவே விசேஷமான நாள். இந்தநாளில், அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம். மங்காத செல்வத்தைத் தந்தருளுவாள் தேவி. மாசிச் செவ்வாயில்... சக்தியின் சொரூபமாகத் திகழும் அம்மனை, அம்பிகையை, தேவியை கண்ணாரத் தரிசித்து, மனதார வணங்கிப் பிரார்த்திப்போம். மங்காத செல்வம் தந்திடுவாள் தேவி.

மாசி மாதம் என்பது மகத்தான மாதம். மங்கலகரமான மாதம். இந்த மாதத்தில் புதிதாகக் கலைகளைக் கற்கத் தொடங்கலாம். கல்வி பயிலுவது மனதில் பதியும். உபநயனம் முதலான சாஸ்திர விஷயங்களில் ஈடுபடுவது மிகுந்த பலன்களைத் தரும்.

அதேபோல், பூமி பூஜை செய்வது, அஸ்திவாரம் இடுவது, கிணறு அல்லது போர் முதலான பணிகளில் ஈடுபடுவது, கிரகப் பிரவேசம் செய்து குடியேறுவது முதலான விஷயங்கள் விருத்தியைக் கொடுக்கும்.

மாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். சிவனாரையும் பெருமாளையும் அம்பாளையும் வணங்கி பிரார்த்தனை செய்வதற்கான அற்புதமான மாதம். இந்த மாதத்தில் வரக்கூடிய செவ்வாய் வலிமை மிக்க நாள். இந்த நாளில் நாம் சொல்லுகிற மந்திர ஜபங்களுக்கும் பூஜைகளுக்கும் ஆலய தரிசனத்திற்கும் மும்மடங்கு பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை விசேஷம் என்பது போல், மாசி மாதத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்புக்கு உரிய நாள். அம்பாளை வணங்குவதற்கும் முருகப்பெருமானை வழிபடுவதற்கும் உரிய சிறப்பு வாய்ந்த நாள்.

மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமையில், அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம். அம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி ஆராதிப்போம். சென்னையில் உள்ள காளிகாம்பாள், சிறப்பு அலங்காரத்தில் விசேஷ பூஜைகளுடன் கருணையும் அருளுமாகக் காட்சி தரும் அழகே அழகு.

வீட்டில் விளக்கேற்றி, அபிராமி அந்தாதி படிக்கலாம். கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் ஒலிக்கவிட்டுக் கேட்பதும் வீட்டின் தரித்திரத்தைப் போக்கும். தலைமுறையையே காக்கும் என்பது ஐதீகம்.

மாசிச் செவ்வாயில்... சக்தியின் சொரூபமாகத் திகழும் அம்மனை, அம்பிகையை, தேவியை கண்ணாரத் தரிசித்து, மனதார வணங்கிப் பிரார்த்திப்போம். மங்காத செல்வம் தந்திடுவாள் தேவி.

SCROLL FOR NEXT