சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!
பனிரெண்டு மாதங்களுக்கும் பனிரெண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. பனிரெண்டு நவராத்திரிகள் இருந்தாலும் இந்த நான்கு நவராத்திரி காலங்கள் மிக மிக முக்கியமானவை என்று சாக்த சாஸ்திர நூல்கள் விவரிக்கின்றன.
சியாமளா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஆராதிப்பதும் வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு மலர்கள் சூட்டி வணங்குவதும் விசேஷம். குறிப்பாக, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி அலங்கரிப்பதும் ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம்.
தை அமாவாசைக்குப் பிறகு வருவதே சியாமளா நவராத்திரி. இந்தக் காலங்களில் வருகிற சதுர்த்தி விசேஷம். இதை மாக சதுர்த்தி என்றும் வரசதுர்த்தி என்றும் கொண்டாடுவார்கள். இன்று (15ம் தேதி சதுர்த்தி நாள்). நாளைய தினம் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை வசந்த பஞ்சமி.
அதேபோல், சியாமளா நவராத்திரி நாளில் வரக்கூடிய பஞ்சமி திதி ரொம்பவே மகிமை மிக்கது. மகத்துவம் வாய்ந்தது. புத்தியில் தெளிவையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏற்றித் தந்தருளக்கூடியது.
சியாமளா நவராத்திரி காலத்தில், தினமும் அம்பிகையை வழிபடலாம். குறிப்பாக பஞ்சமி திதியில், வீட்டில் உள்ள அம்பாள் திருமேனிச் சிலைகளுக்கோ அல்லது படங்களுக்கோ சந்தனம் குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரித்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடலாம். சியாமளா நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமியை, வசந்த பஞ்சமி என்பார்கள்.
பொதுவாகவே பஞ்சமி திதி என்பது சப்த மாதர்களில் ஒருத்தியாகத் திகழும் வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள். எனவே சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!