மாசி சோமவாரத்தில் சிவனாரைத் தரிசனம் செய்வோம். மங்கல காரியங்களைத் தந்தருள்வார். மாங்கல்யம் காத்து ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழச் செய்வார் ஈசன்.
சிவபெருமானை வழிபட எல்லாநாளும் உகந்தநாள்தான். என்றாலும் சிவபெருமானை ஒவ்வொரு விசேஷமான தருணங்களில் தரிசிப்பதும் பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியது.
திதிகளில் திரயோதசி திதியன்று பிரதோஷ பூஜையானது சிவாலயங்களில் விமரிசையாக நடந்தேறும். அதேபோல், திருவாதிரை நட்சத்திர நாள், சிவனாருக்கு உரிய நட்சத்திர தினம். இந்தநாளிலும் விரதம் மேற்கொண்டு சிவனாரை தரிசிப்பதும் பூஜிப்பதும் வேண்டுவதும் எண்ணற்ற நன்மைகளைத் தரும்.
கிழமைகளில், திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள். திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சோமன் என்றால் சந்திரன். சிவபெருமான், தன் சிரசில் கங்கையை வைத்துக் கொண்டிருக்கிறார். கங்கையை மட்டுமா? சந்திரனைப் பிறைபோல் சூடிக்கொண்டிருக்கிறார். இதனால்தான் சோமநாதன், சோமேஸ்வரர், சோமசுந்தரர், சந்திரசூடேஸ்வரர், சந்திரசேகரர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்திருக்கின்றன சிவனாருக்கு.
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், சிவாலயங்களுக்குச் செல்வதும் சிவனாரை தரிசிப்பதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்தபடி வணங்குவதும் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானைத் துதிப்பதும் கிரக தோஷத் தடைகள் அனைத்தையும் நீக்கி அருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதம் என்பது மகத்தான மாதம். மாசி மாதம் என்பது வழிபாட்டுக்கான மாதம். பூஜைகள் செய்வதற்கான மாதம். மாசி மாதத்தில் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, சிறப்புக்கு உரிய நாள். இந்தநாளில், சிவாலயம் செல்வோம். சிவனாருக்கு வில்வம் சார்த்தி தரிசிப்போம். ருத்ரம் பாராயணம் செய்வதும் ஒலிக்கவிட்டுக் கேட்பதும் நல்ல அதிர்வுகளை உண்டுபண்ணும்.
சோமவாரம் சுபிட்சம் நிச்சயம் என்பார்கள். சோமவாரத்தில், சிவ தரிசனம் செய்தால், மங்கல காரியங்கள் தருவார்; மங்காத செல்வங்களைக் கொடுப்பார்; மாங்கல்ய பலம் சேர்ப்பார்; நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழச் செய்வார் சிவனார்! சந்திர பலம் தருவார்; சந்திர பலம் கொடுப்பார்’; சந்திர யோகம் கிடைக்கப் பெறலாம் என்கிறார் ஆச்சார்யப் பெருமக்கள்.