யாதுமாகி நிற்பவள் சக்தி. சக்தியின் வடிவங்கள் வெவ்வேறானவையே தவிர அவளது அருளும் கருணையும் அழகும் குணமும் எல்லாமே ஒன்றுதான்.
சக்தியின் வழிபாட்டுத் தலங்கள் இந்தப் பாரதபூமியில் நிறையவே இருக்கின்றன. காஞ்சியில் காமாட்சியாக மதுரையில் மீனாட்சியாக காசியில் விசாலாட்சியாக குஜராத்தில் அம்பாஜியாக வடக்கில் வைஷ்ணவியாக தேவியின் அற்புத லீலைகளை எடுத்துச் சொல்லும் க்ஷேத்திரங்கள் அனேகம்.
திருக்கடவூரில் உறையும் அபிராமி அன்னையும் தேவியின் ஒரு வடிவம். அன்னை அபிராமியின் மீது சுப்பிரமணிய என்ற பெயருடைய அபிராமி பட்டரால் எழுதப்பட்ட நூறு அற்புதமான பாடல்கள் அபிராமி அந்தாதியாகும். இன்று பெண்கள் பாராயணமாகவும் பாடல்களாகவும் பிரார்த்தனைகளிலும் ஆராதனைகளிலும் சேர்த்துக் கொள்ளும் இது அந்தாதி வடிவில் உள்ளது. முந்தையப் பாடலின் நிறைவுப் பகுதியை அடுத்தபாடலின் துவக்கமாக அமைத்துப் பாடும் முறை அந்தாதி எனப்படுகிறது. இதனால் பாடலை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.
தூய தமிழில் அழகிய வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட அபிராமி அந்தாதி இன்றும் தமிழகமெங்கும் உள்ள தேவியின் திருத்தலங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.