‘நீங்கள் பிறருக்குக் கொடுங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். உங்களுக்கு அதற்கு பன்மடங்காக நான் கொடுக்கிறேன்’ என பகவான் சாயிபாபா அருளியுள்ளார்.
எல்லா சாஸ்திரங்களும் ஒவ்வொரு வகையிலும் நமக்கு நல்ல நல்ல விஷயங்களை வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன. நாம் இந்தப் பிறவியைக் கடைத்தேற்றுவதற்காகத்தான் இத்தனை விஷயங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. இதனை நூல்பிடித்துக் கொண்டு, நம் அன்றாட வாழ்க்கையை எடுத்துச் செல்லவேண்டும் என்பதும் நகர்த்திக் கொண்டு செல்லவேண்டும் என்பதும்தான் வாழ்க்கையின் மிக முக்கியமான கணக்கு.
சாஸ்திரம் வகுத்துக் கொடுத்திருப்பதை, நமக்கு இன்னும் எளிமைப்படுத்தியும் புரியவைக்கவுமாக பிறந்தவர்கள்தான் ஆச்சார்யர்கள். அதேபோல், நம் வாழ்க்கைக்குத் தேவையான கடமைகளை செவ்வனே செய்யவும் தெய்வ கடாட்சத்தை நமக்குப் பெற்றுத் தருபவர்களுமாக இந்த உலகுக்கு வந்தவர்கள்தான் மகான்கள்.
பகவான் ஷீர்டி சாயிபாபா, அப்பேர்ப்பட்ட மகான்களில் ஒருவராக லட்சக்கணக்கான பக்தர்களால் இன்றைக்கும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆட்கொள்ளுதல் என்பதும் சரணடைதல் என்பது ஒரு புள்ளியில் இணைவதுதான் பக்தியின் உச்சம் என்று சொல்லுவார்கள் ஆச்சார்யர்கள். நாம் கடவுள் எனும் சக்தியை சரணடையவேண்டும். பக்தியின் மூலமாகவும் வழிபாட்டின் மூலமாகவும் பூஜைகளின் மூலமாகவும் மந்திர ஜபங்களின் மூலமாகவும் கடவுளைச் சரணடையலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமாக, சக மனிதர்களுக்கு நாம் செய்கிற தானங்களாலும் உதவிகளாலும் கடவுளை சரணடையலாம் என்கிறார் பகவான் சாயிபாபா.
முழுமையாக நம் எண்ணங்களை இறைவனிடம் கொடுப்பதுதான் சரணடைதல். அப்படி இருந்துவிட்டால், மகான்களும் இறைவனும் செய்வதுதான் நம்மை ஆட்கொள்ளுதல். சரணடைவதற்கும் ஆட்கொள்வதற்கும் நம்மை ஆற்றுப்படுத்தி வழிநடத்துவதற்கும்தான் இங்கே சாஸ்திரங்கள் இருக்கின்றன. வழிபாடுகள் இருக்கின்றன. பூஜைகள் இருக்கின்றன. மந்திரங்கள் இருக்கின்றன. மகான்கள் சூட்சுமமாக இருந்து அருள்பாலித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
‘சாஸ்திரங்கள் சொல்லியபடி நடந்து வாருங்கள். வழிபாடுகளைச் செம்மையாகச் செய்யுங்கள். முறையாக பூஜைகளை மேற்கொள்ளுங்கள். தொடர்ந்து மந்திர ஜபங்களில் மனதைச் செலுத்துங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, சக மனிதர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டே இருங்கள். அடுத்தவருக்கு நன்மைகளை வழங்கிக் கொண்டே இருங்கள். நீங்கள் பிறருக்கு, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு வழங்கியதை பன்மடங்களாக கொடுப்பதற்கு நான் இருக்கிறேன்’ என பகவான் சாயிபாபா அருளியிருக்கிறார்.
முடிந்தவரை, நம்மால் முடிந்ததையெல்லாம் நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களுக்கு வழங்குவோம். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார் பாபா. அவற்றையெல்லாம் பல மடங்காக நமக்குத் திருப்பிக் கொடுப்பதற்கும் நமக்கு அருளுவதற்கும் தயாராக இருக்கிறார் பாபா என விவரிக்கிறது சாயி சத்சரித்திரம்.
பாபாவை நினைத்து நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம். பாபாவின் அருளைப் பெறுவோம்!