ஆன்மிகம்

தை அமாவாசை ; வீட்டிலேயே முன்னோரை வழிபடலாம்! 

வி. ராம்ஜி

தை அமாவாசை நன்னாளில், முன்னோர்களை வீட்டில் இருந்தபடியே வணங்குவோம். வழிபடுவோம். ஆராதிப்போம்.

அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். நம் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்து அவர்களின் பரிபூரணமான ஆசியைப் பெறக்கூடிய அற்புத நாள். மாதந்தோறும் அமாவாசை வரும். அதுவே முன்னோர்களை வணங்குவதற்கு உண்டான நாள்தான்.

ஆக, பனிரெண்டு அமாவாசைகள். இந்த அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள், மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த திதி நாளாக, புனித நாளாகப் போற்றப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை என மூன்று அமாவாசையில், மறக்காமல் பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம்.

அமாவாசை முதலான தர்ப்பண நாட்களில், அவசியம் தர்ப்பணம் முதலான காரியங்களில் ஈடுபடவேண்டும். தர்ப்பையைக் கைவிரலிடுக்கில் வைத்துக்கொண்டு, முன்னோர்களின் பெயர்களையும் கோத்திரங்களையும் மூன்று முறை சொல்லி வழிபடவேண்டும். அப்படிச் சொல்லும்போது, எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.

வீட்டுக்கு ஆச்சார்யர்களை அழைத்து இந்த தர்ப்பணத்தைச் செய்யலாம். அதேபோல், வீட்டில் உள்ள முன்னோர்களின் படங்களுக்கு சுத்தம் செய்து, நன்றாகத் துடைத்து, பூக்களிட வேண்டும். குறிப்பாக, துளசி அல்லது வில்வம் சார்த்தி வழிபடவேண்டும்.

முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவை இலையில் வைத்து படையலாக்கலாம். அதேபோல், நம் குடும்ப வழக்கத்தின்படியும் உணவை வைத்துப் படையல் போடலாம். இப்படி முன்னோர்களுக்குப் படையலிடும் போது, குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து இருந்து, பூஜிக்கவேண்டும். இயலாத பட்சத்தில், கணவனும் மனைவியுமாக சேர்ந்து இந்தப் படையலைப் போடலாம். முன்னோர் வழிபாட்டைச் செய்யலாம்.

வீட்டில் பூஜையறையில் குத்துவிளக்கேற்றிக் கொள்ளவேண்டும். கிழக்கு அல்லது வடக்கு நோக்கி முன்னோர்களின் படங்களை வைக்கலாம். தர்ப்பணம் செய்யும்போதும் கிழக்கு, வடக்கு என ஏதேனும் ஒரு திசையில் முன்னோர்களின் படங்களை வைக்கலாம்.

கோதுமைத்தூள், படையலிட்ட உணவு ஆகியவற்றை காகத்துக்கு வைத்து வணங்கலாம். பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கி பிரார்த்தனை செய்வது மிகுந்த விசேஷம்.

எதை மறந்தாலும் தை அமாவாசையில் முன்னோர் வழிபாட்டை மட்டும் மறக்கவே கூடாது. நாளைய தினம் 11ம் தேதி வியாழக்கிழமை, தை அமாவாசை. இந்தநாளில், முன்னோரை வணங்குவோம். வீட்டில் இருந்தபடியே வணங்குவோம். பசுவுக்கு அகத்திக்கீரையும் காகத்துக்கு படையலிட்ட உணவையும் வழங்குவோம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

SCROLL FOR NEXT