ஆன்மிகம்

தை பிரதோஷம்... சிவனாருக்கு வில்வம்! 

வி. ராம்ஜி

தை பிரதோஷ நன்னாளில், சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி வேண்டுவோம். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். சுபிட்சமும் நிம்மதியும் பெறலாம்.

சிவபெருமானை வழிபட பல முக்கிய தினங்கள் இருக்கின்றன. மாதந்தோறும் வருகிற சிவராத்திரி, சிவபெருமானை விரதம் இருந்து மேற்கொள்வார்கள் பக்தர்கள். அதேபோல், ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திர நாளும் சிவனாருக்கு உகந்த நாட்கள். இந்தநாளிலும் பக்தர்கள், சிவ தரிசனம் செய்வதும் சிவாலயத்தில் நடைபெறுகிற பூஜைக்கு உதவுவதும் மிகச்சிறந்த பலன்களை வழங்கும்.
மாதத்தில் சிவராத்திரியும் நட்சத்திரத்தில் திருவாதிரையும் விசேஷமான நாட்கள். சிவ வழிபாட்டுக்கு உகந்தநாட்கள். அதேபோல், திதியில் திரயோதசி ரொம்பவே விசேஷமான நாள். திரயோதசி திதியைத்தான், பிரதோஷம் என்று கொண்டாடுகின்றனர் சிவனடியார்கள்.

பிரதோஷ பூஜை என்பது புண்ணியத்தைத் தந்தருளக்கூடிய அற்புதமான பூஜை. இந்த நாளில், சிவாலயங்களில், நந்திதேவருக்கும் சிவலிங்கத்துக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொள்வதும் பூஜைக்கு உரிய பொருட்களை வழங்குவதும் முக்கியமாக அபிஷேகப் பொருட்களை வழங்குவதும் இன்னல்களையெல்லாம் போக்கும். முன் ஜென்ம பாவங்களையெல்லாம் நீக்கும் என்று விளக்குகிறார்கள் ஆச்சார்யர்கள்.

பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த சமயத்தில்தான் அனைத்துச் சிவன் கோயில்களிலும் பூஜைகள் அமர்க்களப்படும். நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் பதினாறு வகையான அபிஷேகங்களும் நடைபெறும்.

இன்று செவ்வாய்க்கிழமை 9ம் தேதி பிரதோஷம். அற்புதமான இந்தநாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்வோம். சிவ பூஜையில் கலந்துகொள்வோம். சிந்தை முழுக்க சிவம் இருந்தால் என்றும் பயமில்லை என்பார்கள். சிவனாருக்கு வில்வமும் நந்திதேவருக்கு அருகம்புல்லும் வழங்குங்கள்.

மனதில் தெளிவும் புத்தியில் ஞானமும் கொடுத்து அருளுவார் சிவனார்!

SCROLL FOR NEXT