தை கடைசி செவ்வாய்க்கிழமையில், அம்பாளை தரிசனம் செய்து பிரார்த்திப்போம். நமக்குள் சக்தியைக் கொடுத்தருளும் அம்மனை ஆராதிப்போம்.
செவ்வாயும் வெள்ளியும் அம்பாள் வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாட்கள். சக்தி என்று பெண் தெய்வங்களைச் சொல்லுகிறோம். பெண் தெய்வங்களையும் கிராம தெய்வங்களையும் வழிபட்டு வந்தால், குன்றாத வளமும் செல்வமும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை, அம்மனை, கிராம தெய்வங்களை மறக்காமல் வழிபடுவது வளம் சேர்க்கும். நலமும் பலமும் தந்தருளும். அபிராமி அந்தாதி பாராயணம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.
காலையும் மாலையும் விளக்கேற்றி, விளக்கையே அம்பாளாக பாவித்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்து, அம்பாளுக்கு உரிய ஸ்லோகங்கள் சொல்லி, குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்திப்பதும், வணங்குவதும் மங்கல காரியங்களை இல்லத்தில் இனிதே நடத்தித் தரும்.
பெண் குலதெய்வங்களைக் கொண்டவர்கள், அவசியம் தை செவ்வாய்க்கிழமையில் குலதெய்வத்தை வணங்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வீட்டில் இருந்தபடியே குலதெய்வத்தை நினைத்துக் கொண்டு, ஏதேனும் படையலிட்டு குடும்பமாக இருந்து நமஸ்கரிக்கலாம். வழிபடலாம். குடும்பத்தில் நடக்கவேண்டிய நற்காரியத்தைச் சொல்லி முறையிட்டு வேண்டுகோளாக நம்முடைய பிரார்த்தனையை வைக்கலாம். அனைத்தையும் ஈடேற்றித் தந்திடுவாள் தேவி.
தை மாத செவ்வாய்க்கிழமை என்பது சக்திக்கு மட்டுமா விசேஷம்? சக்தியின் மைந்தனான வேலவனுக்கும் உரிய நாள்தான். எனவே தை கடைசி செவ்வாய்க்கிழமையில், தேவி வழிபாட்டையும் வேலவ தரிசனத்தையும் மறக்காமல் செய்யுங்கள்.
லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் ஒலிக்கவிட்டுக் கேட்பதும் எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், மாசிக்கு முன்னதான தை கடைசி செவ்வாயில் மாரியம்மன் வழிபாடு மகத்தானது. இதையடுத்து மாசி மாதம் தொடங்கியதும் அம்மன் கோயில்களில் விழாக்கள் விமரிசையாக நடைபெறும். மாசி மாதத்தையொட்டி அம்மன் இப்போதே குளிர்ந்து போயிருப்பாள் என்றும் அப்போது அவளிடம் வைக்கின்ற சகல காரியங்களும் விரைவிலேயே நடந்தேறும் என்றும் கிராமங்களில் அம்மன் கோயில்களில் வழிபடும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
தை மாதத்தின் கடைசிச் செவ்வாய்க்கிழமையில்... அம்மனைக் கொண்டாடுவோம். அம்மனை வணங்குவோம். வளம் பெறுவோம்.