ஆன்மிகம்

புஷ்பவல்லி தாயாருக்கு புடவை! மாங்கல்யம் தருவாள்; மாங்கல்யம் காப்பாள்! 

வி. ராம்ஜி

தேவர்களும் முனிவர்களும் வழிபட்ட ஜெகத்ரட்சக பெருமாளை வணங்குவோம். வையத்தையும் நம்மையும் காத்தருள்வார் பெருமாள்.

பெருமாளை தரிசிக்க, தேவர்களும் முனிவர்களும் ஒன்று கூடி வந்தனர். வழிபட்டனர். அதனால் அந்தத் திருவிடத்துக்கு கூடலூர் என்றும் திருக்கூடலூர் என்றும் திருநாமங்கள் அமைந்தது என்கிறது ஸ்தலபுராணம்.

மூவுலகையும் காக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார். அப்படி வராக அவதாரம் எடுத்த பெருமாள், பூமியைப் பிளந்து, உள்ளே புகுந்தார். அதனால் இங்கே உள்ள பெருமாளுக்கு வையம் காத்த பெருமாள் என்று திருநாமம் அமைந்தது.

கூடலூர் தலத்தில் புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வராக மூர்த்தியானவர் வெளியே வந்து திருக்காட்சி தந்தருளினார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மூலவரின் திருநாமம் ஸ்ரீஜெகத்ரட்சக பெருமாள். வையம் காத்த பெருமாள். ஸ்ரீதேவி பூதேவியுடன் அற்புதமான கோலத்தில் காட்சி தருகிறார். தாயாரின் திருநாமம் புஷ்பவல்லித் தாயார். பத்மாஸனி எனும் திருநாமம் உண்டு.

மிகப் பிரமாண்டமான மதிலுடன் கொண்ட அற்புதக் கோயில். திருவையாறில் இருந்து குடந்தை மாநகரம் நோக்கிச் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆடுதுறை பெருமாள் கோயில். அய்யம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊரைத்தான் திருக்கூடலூர் என்கிறார்கள் பக்தர்கள்.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் இது. கிழக்குப் பார்த்தபடி தரிசனம் தரும் ஜெகத்ரட்சகப் பெருமாளை தொடர்ந்து ஒன்பது சனிக்கிழமைகளில் வந்து தரிசித்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.

திருமங்கை ஆழ்வார் இந்தத் தலத்துக்கு வந்து, பெருமாளின் திருமேனியைக் கண்டு மெய்யுருகி இங்கேயே சிலகாலம் தங்கினார் என்றும் இந்தத் தலத்து நாயகனான ஜெகத்ரட்சகப் பெருமாளை பத்துப் பாடல்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார் என்றும் விவரிக்கிறது ஸ்தலபுராணம்.

இங்கே, ஆடுதுறை பெருமாள் கோயிலுக்கு இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. சக்ரதீர்த்தம் என்றும் காவிரி தீர்த்தம் என்றும் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

வெள்ளிக்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து புஷ்பவல்லித் தாயாருக்கு புடவை சார்த்தி மனதார பிரார்த்தனை செய்துகொண்டால் கல்யாண யோகம் கூடிவரும். மாங்கல்ய பலம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

தேவர்களும் முனிவர்களும் வழிபட்ட ஜெகத்ரட்சக பெருமாளை வணங்குவோம். வையத்தையும் நம்மையும் காத்தருள்வார் பெருமாள்.

SCROLL FOR NEXT