ஆன்மிகம்

மேடை: இசையில் வெளிப்பட்ட சிவசக்தி மகிமை

வா.ரவிக்குமார்

சிவனும் சக்தியும் இன்றியமையாத அம்சங்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்லும் வகையில், பாரதிய வித்யாபவனில் பாடகி சைந்தவி வழங்கிய இசை நிகழ்ச்சி அமைந்திருந்தது. சிவன், சக்தியை மையப்படுத்தி முத்துசாமி தீட்சிதர், கோபால கிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன் உள்ளிட்ட பலரின் புகழ்பெற்ற பாடல்களை இந்த நிகழ்ச்சியில் பாடினார் சைந்தவி. துரை சீனிவாசன் வயலினுடன் வழக்கத்துக்கு மாறாக (கணபதி) தபேலாவும், (ரவிஷங்கர்) கீபோர்டும், (கிருஷ்ண கிஷோர்) எலக்ட்ரானிக் பேடும் பக்தி இசைக்கு கைகோத்தது புதிய அனுபவமாக இருந்தது.

சிவசக்தி சொரூபத்தின் பொருள் என்ன?

நாம் எடுத்த காரியத்தை செம்மையாகச் செய்து முடிக்க உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். அதற்கு பக்தி வேண்டும். சிவனும் சக்தியும் ஒன்று என்று சொல்வதன் பொருள் என்ன தெரியுமா? வெற்றி என்னும் முக்தியை அடையக் காரணமாய் இருப்பவன் சிவன். காரியமாய் இருப்பவள் சக்தி. காரணமும் காரியமும் ஒன்றிணையாமல் வெற்றி இல்லை என்பதுதான் சிவசக்தி சொரூபத்தின் பொருள். இதுபோன்ற விளக்கங்களையும் ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் கூறினார் சைந்தவி. பக்தி ரசத்தோடு இந்த உரைகளை எழுதிக் கொடுத்திருப்பவர் சுப தணிகாசலம்.

நாதமயமான சிவன்

டம டம டமவென ஒரு நாதம். என்ன இது? அது ஓசை அல்லவா? அது எப்படி நாதம் ஆகும்? ஆகும். ஏனென்றால் அந்த `டம டம டம டம’ கேட்பது பரமனின் உடுக்கையிலிருந்து.

பணியும் பக்தர்களுக்கு அது பஞ்சாமிர்தமாக இனிக்கும் நாதம். பதுங்கிப் பாயும் பகைவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் நாதம். ஆட்டம் போடும் அக்கிரமங்களுக்கு `அடங்குங்கள்’ என்று எச்சரிக்கை செய்யும் நாதம்.

ஈசன், கனக சபேசன், தில்லை வாசன், நடராஜனை மகாதேவா என்று சொல்லிப் பணிவதைவிட, சம்போ மகாதேவா என்று பணிவதில் பக்தி அதிகம். சிவனின் நடன அதிர்வுகளையும், நாதப் பதிவுகளையும் விவரிக்கும் சுவாமி தயானந்த சரஸ்வதியின் `போ ஷம்போ…’ பாடலை சைந்தவி பாடியபோது, பார்ப்பவர்களின் நாடித் துடிப்போடு பக்திப் பரவசம் கூடியது.

SCROLL FOR NEXT