ஆன்மிகம்

செல்வம் தரும் சொர்ணாகர்ஷ பைரவர்; தயிர்சாதம் வழங்கினால் சுபிட்சம் நிச்சயம்! 

வி. ராம்ஜி

சிவபெருமானின் அம்சமாகவும் சிவனாரில் இருந்து வெளிப்பட்டவராகவும் பைரவரை விவரிக்கின்றன புராணங்கள். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவரை அனைத்துச் சிவாலயங்களிலும் தரிசிக்கலாம்.

எல்லா சிவாலயங்களிலும் பைரவர் சந்நிதி அமைந்துள்ளது. இவரை பெரும்பாலும் போகிறபோக்கில் தரிசித்துவிட்டு வந்துவிடுகிறோம். அம்பாள் சந்நிதியிலும் சிவனாரின் சந்நிதியிலும் மெய்யுருகி வேண்டிக்கொள்வதைப் போல, பைரவர் சந்நிதியிலும் வேண்டிக்கொள்ளவேண்டும், பைரவரையும் மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வாழ்வில், பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்கிற ஆசை எவருக்குத்தான் இல்லை. எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டும் எதிரிகளை வெல்ல வேண்டும் என்கிற ஆர்வமும் வேகமும் எவருக்குத்தான் இல்லை. இந்த அத்தனை விஷயங்களையும் நிவர்த்தி செய்து அருளக்கூடியவராகத் திகழ்கிறார் பைரவர்.

பைரவரின் வடிவங்கள் பல உள்ளன. இந்த வடிவங்களில் சொர்ணாகர்ஷண பைரவர் மிக மிக விசேஷமானவர் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.
சொர்ணாகர்ஷண பைரவர், கருணையே உருவானவர். நீதிமானைப் போல் இருந்து நம் நல்லதுகெட்டதுகளுக்குத் தக்கபடி அருளக்கூடியவர். வழக்கு முதலான சிக்கல்களையும் வாழ்க்கையில் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும் சரிபண்ணிக்கொடுப்பார், சக்தியை வழங்கி அருளுவார். வழக்கில் வெற்றியைத் தந்தருளுவார் காலபைரவர் என்று விவரிக்கின்றன ஞானநூல்கள்.

பைரவர் வழிபாட்டில், சொர்ணாகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷமானவர். சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமைகளிலும் தேய்பிறை அஷ்டமி திதியிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பைரவ வழிபாடு செய்வது மகத்தான பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.

பைரவரை மனதில் நினைத்துக் கொண்டு, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம். அதேபோல், ஆலயத்தில் உள்ள பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம்.

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹ்ஜர ப்ரம்ஹாத்காய தீமஹி:
தந்நோ ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்

என்கிற சொர்ணாகர்ஷண காயத்ரியை மனதாரப் பாராயணம் செய்து வழிபடுங்கள்.

அதேபோல்,

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரிய வித்வேஷனாய
மகா பைரவாய நம; ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்

எனும் சொர்ணாகர்ஷண பைரவரின் மூலமந்திரத்தைச் சொல்லி பைரவரை வழிபடுங்கள். தயிர்சாதம் நைவேத்தியம் செய்வதும் நான்கு பேருக்கு தயிர்சாதப் பொட்டலம் வழங்குவதும் கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும். வீட்டில் சுபிட்சத்தைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

SCROLL FOR NEXT