தை சஷ்டியில் முருகப்பெருமானை மனதார வேண்டுவோம். மங்கல காரியங்களை இனிதே நடத்தித் தந்திடுவான். மங்காத செல்வம் தந்து காத்திடுவான் ஞானக்குமரன்.
சைவ வழிபாடு என்பது போல, வைணவ வழிபாடு என்பது போல, முருக வழிபாடு என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். முருக வழிபாட்டை கெளமார வழிபாடு என்பார்கள்.
முருக வழிபாடு என்பது மிக எளிமையான முறைகளைக் கொண்டது என்பார்கள். ‘முருகா சரணம்’ என்று சொன்னாலே, அழகன் முருகன் குளிர்ந்து அருளுவான் என்பார்கள் பக்தர்கள். செவ்வாய்க்கு அதிபதி முருகக் கடவுள் என்பதால், முருகப் பெருமானை மனதார வேண்டி வந்தால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும். கல்யாண யோகம் கைகூடி வரும் என்பது ஐதீகம்.
நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு உரிய பரிகாரத் திருத்தலமாகத் திகழ்கிறது வைத்தீஸ்வரன் கோவில். செவ்வாய்க்கிழமைகளிலும் கந்தனுக்கு உரிய நாளிலும் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று அங்காரகன் சந்நிதிக்குச் சென்று வணங்கி வந்தால், செவ்வாய் தோஷம் முதலானவை நீங்கும். செவ்வாயின் பலம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மாதந்தோறும் வருகிற கார்த்திகை நட்சத்திர நாளில், மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி நன்னாளில், முருகப்பெருமானை ஆலயத்துக்குச் சென்று தரிசிப்பதும் வீட்டில் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்வதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லவை. எதிரிகளை பலமிழக்கச் செய்வார் ஞானவேலன். கவலைகளையெல்லாம் போக்கி அருளுவார் கந்தகுமாரன்.
இன்று 3ம் தேதி புதன்கிழமை சஷ்டி நன்னாளில், வள்ளிமணாளனை வேண்டுவோம். அருகில் உள்ள ஆலயத்துக்க்குச் சென்று முருகக் கடவுளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேலவனைப் பிரார்த்தனை செய்வோம். வீடு மனை யோகம் தந்தருள்வான் வெற்றிக்குமரன்.