தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் | படம்: என்.ராஜேஷ். 
ஆன்மிகம்

தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ரெ.ஜாய்சன்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வேல் குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

காலை 8.45 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு எருந்தளினார்.

மாலையில் மூலவருக்கு சாயரட்ச்சை தீபாராதனை ஆனதும் சுவாமி அலைவாயுகந்த பெருமானுக்கு உபயதாரர் சார்பில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் படி இந்த ஆண்டு தைப்பூச மண்டபத்துக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் செல்லாமல் உள்பிரகாரத்தில் எழுந்தருளினார்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதம் இருந்து பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்தனர். பக்தர்கள் அதிகாலையிலேயே கடலில் நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் நீண்ட வேல்களால் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். சில பக்தர்கள் கிரி பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து வழிப்பட்டனர். கோயில் கடற்கரையில் பக்தர்கள் அலைமோதியது. சிறுவர், சிறுமிகளும் காவடி எடுத்து வந்திருந்தனர்.

பக்தர்களுக்கு அனுமதி

கரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக கோயில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் கோயில் வளாகத்துக்கு வெளியே மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று மாலையில் இருந்து கோயில் வளாகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூசத் திருவிழாவுக்காகக் குவிந்தனர். இந்த பக்தர்கள் நேற்று இரவு முதல் கோயில் வளாகத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் வெளியே தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தத்தளித்த பக்தர்கள், கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தனர்.

தைப்பூச விழாவை முன்னிட்டு மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், தூத்துக்குடி எஸ்.பி. ஜெயகுமார் ஆகியோர் தலைமையில் ஏடிஎஸ்பி கோபி, ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தைப்பூச விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT