ஆன்மிகம்

ஆன்மிக நூலகம்: 108 திவ்ய தேச உலா

செய்திப்பிரிவு

திருக்கார்வானம் என்ன இலக்கியபூர்வமான பெயர்! சூல் கொண்ட மேகங்கள் சூழ்ந்த அழகிய வானம். அந்த மேகங்கள் மழை பொழிவிக்குமோ அல்லது காற்றடித்துக் கலைந்து சென்றுவிடுமோ! பெருமழையாய் பூமியை நீரால் நிறைக்குமோ அல்லது சிறு தூறலிட்டு ஏமாற்றிச் சென்று விடுமோ! பக்தி என்ற பருவம் முதிர்ந்தால், திருமாலின் அருள் எனும் பெருமழையை நம்மால் துய்க்க முடியும்; அது குறைந்தால், அந்த அளவுக்கேற்ப இறைவனின் அருளும் மாறுபடும். ஆனால் இயற்கையின் அடிப்படையில் மழைக்கு இருக்கும் கூடுதல், குறைச்சல் நியதி, பெருமாள் அருளுக்கும் பொருந்துமா என்ன?

பெருமாள் என்னவோ தன் அருள் அனைவருக்கும் பரவலாகவே, அனைவருக்கும் பொதுவாகவே, ஏற்றத் தாழ்வில்லாமல் தந்துதான் பரிபாலிக்கிறார். நமது முன்வினைப்பயன், இந்தப் நம் பக்தி ஈடுபாடு என்ற அளவீடே அவரவருக்குத் தகுதியாக்கி அந்த அருளைக் கூடுதலாகவோ, குறைவாகவோ பெற முடிகிறது. இந்தக் கார்வானப் பெருமாளின் அருளும் அப்படிதான். பெருமழையால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. இதனை பெருமாள் நல்லோரைக் காப்பதும் தீயோரை அழிப்பதுமாகிய கணக்காக எடுத்துக் கொள்ளலாம்.

திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் இந்தத் `திருமால் இரும் மலை` திருமாலின் இதயம் கவர்ந்த திருத்தலம். இதை அவரே ரசித்து மகிழ்ந்து விருப்பமுடன் தன் தலமாக அமைத்துக் கொண்டிருக்கிறார். `தாடகைமாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்` அன்றும், ` தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்` என்றும் திருமங்கையாழ்வார் இத்தலத்தை இறைவனே தேர்ந்தெடுத்து கோயில் கொண்டதை சிலாகித்துப் பாடுகிறார்.

திருக்குடந்தை திருத்தலத்தில் வில்லேந்திய கோலத்தில் உற்சவர் பெருமாள் திகழ்கிறார். அதனாலேயே இவர் சார்ங்கபாணி எனப்படுகிறார். சிலர் இவரை வாய்க்கு சுலபமாக `சாரங்கபாணி` என்று அழைக்கிறார்கள். ஆனால் சாரங்கம் என்றால் மான் என்று பொருள். சாரங்கத்தைக் கையிலேந்தியவர் சிவபெருமான். அதனால் அவர்தான் சாரங்கபாணி. வில்லேந்திய பெருமாள் சார்ங்கபாணிதான். கோயில் முகப்பிலேயே `சார்ங்கபாணிப் பெருமாள் கோயில்` என்றே பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்து மகிழ்ந்திருக்கிறார். “சிம்ம உருவினனாக, வாள் போன்ற கூரிய பற்களைக் கொண்டவனாக, தன் கூரிய நகங்களால் ஹிரண்யன் உடலைக் கிழித்து, பிளந்து தன் போபத்தை வெளிப்படுத்திய தலம் இந்த சிங்கவேள் குன்றம். இங்கு மூட்டப்படும் தீயானது வானையே தொடும் அளவுக்கு நீண்டு செல்லும். மிக உயரமான மலைகளைக் கொண்ட, அவ்வளவு எளிதாகச் சென்றடைந்துவிட முடியாத இந்த சிங்கவேள் குன்றத்தில் எம்பெருமான் திவ்ய தரிசனம் நல்குகிறார்” என்கிறார் ஆழ்வார்.

புத்தகம்

108 திவ்ய தேச உலா | ஆசிரியர்: பிரபுசங்கர் | வெளியீடு: சூரியன் பதிப்பகம் | பாகங்கள்: நான்கு | மொத்த விலை: ரூ.1025

SCROLL FOR NEXT