ஆன்மிகம்

அஷ்டமியில் பைரவாஷ்டகம்

வி. ராம்ஜி

அஷ்டமியில் பைரவாஷ்டம் பாராயணம் செய்து பைரவரை வணங்குங்கள். கஷ்டமெல்லாம் தீரும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டமெல்லாம் மாறி லாபம் பெருக்கித் தருவார் காலபைரவர்.

எந்தவொரு வழிபாடும் நம்மை வளப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் உண்டாக்கப்பட்டவையே. சக்தி மிக்க தெய்வத்திருமேனிகளை தரிசிப்பதும் வணங்குவதும் நம்மிடம் தீயசக்திகள் ஏதும் அண்டாமல் நம்மைக் காக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தெய்வங்களை வழிபடுவதற்கு உரிய திதிகள், நட்சத்திரங்கள், கிழமைகள் என நியமங்களைச் சொல்லி வைத்திருக்கிறது சாஸ்திரம். ஏகாதசியில் பெருமாள் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது. துவாதசியும் பெருமாள் வழிபாட்டுக்கும் விரதத்திற்கும் உகந்தது.

அதேபோல் பஞ்சமியில் வாராஹி வழிபாடு வலிமை சேர்க்கும். சஷ்டியில் முருகப்பெருமானை விரதம் மேற்கொண்டு தரிசிப்பார்கள். இப்படியான திதிகளில் அஷ்டமி திதி மிக மிக முக்கியமானது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அஷ்டமியில் பைரவரைத் தரிசித்து வழிபட்டால், கஷ்டமெல்லாம் தீரும் என்பது ஐதீகம். கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். துர்கை வழிபாடு எப்படி வலிமைமிக்க வழிபாடாகச் சொல்லப்படுகிறதோ, அதேபோல பைரவ வழிபாடு என்பதும் சாந்நித்தியமானதாகவும் சக்தி மிக்கதாகவும் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சிவாலயங்கள் அனைத்திலும் பைரவருக்கு சந்நிதி அமைந்திருக்கும். ஆலயங்களின் பாதுகாவலனாகத் திகழ்கிறார் பைரவர். சிவாலயங்களில், கோஷ்டத்தைச் சுற்றி வலம் வரும்போது, விநாயகர், முருகப்பெருமான், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், துர்கை முதலான சந்நிதிகளை அடுத்து பைரவர் சந்நிதி அமைந்திருக்கும்.
நம்மைச் சுற்றியுள்ள துர்தேவதைகளை விரட்டி, நமக்கு அரண் போல் இருந்து காத்தருள்வார் பைரவர். அஷ்டமி திதி நாளில், பைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது வேண்டியதையெல்லாம் தந்தருளும்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களை நீக்கி லாபம் பெருக்கித் தருவார். மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது வழக்கில் இருந்த சிக்கல்களெல்லாம் நீங்கி சொத்துப் பிரச்சினைகளில் நல்ல தீர்வு ஏற்படும் என்பது ஐதீகம்.

பைரவரின் வாகனம் நாய். எனவே, அஷ்டமி நாளில் நாய்களுக்கு உணவு வழங்குவதும் பிஸ்கட் வழங்குவதும் நம் பாவங்களையெல்லாம் போக்கவல்லது. அஷ்டமி என்றில்லாமல் தினமும் நாய்களுக்கு உணவிடுவதும் மிகுந்த நன்மைகளைத் தரும் என்கிறார்கள் பக்தர்கள்.

இன்று 20ம் தேதி அஷ்டமி. பைரவரை வணங்குவோம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்வோம். தெருநாய்களுக்கு உணவிடுவோம். சிக்கல்களில் இருந்தும் சரிவுகளில் இருந்தும் ஏற்றமும் மாற்றமும் தந்தருளுவார் பைரவர்.

SCROLL FOR NEXT