ஆன்மிகம்

எளிய பக்தர் கட்டிய பிரமாண்ட கோபுரம்; குடந்தை சாரங்கபாணி கோயில் அற்புதம்! 

வி. ராம்ஜி

குடந்தை சாரங்கபாணி திருத்தலத்துக்கு வந்து, கோபுரத்தையும் ஆராவமுதனையும் மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார பிரார்த்தனை செய்யுங்கள். நம்முடைய ஏழு ஜென்ம பாவங்களையும் போக்கி அருளுவார் சாரங்கபாணி பெருமாள்!

கோயில் நகரம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீசாரங்கபாணி கோயில். கும்பகோணத்தில் ஏகப்பட்ட ஆலயங்கள். அவற்றில், மிகப்பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது சாரங்கபாணி கோயில்.

பெருமாளின் திருநாமம் ஸ்ரீசாரங்கபாணி. ஆராவமுதன் என்ற திருநாமமும் உண்டு. ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுரம் 236 அடி. ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம் 165 அடி. ஸ்ரீரங்கம் திருத்தலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்த மிகப்பெரிய கோபுரமாக திகழ்கிறது சாரங்கபாணி கோயிலின் ராஜகோபுரம். சுமார் 146 அடி உயரத்துடனும் கோபுரத்தின் வாசல் உயரம் 51 அடி உயரத்துடனும் சுமார் 90 அடி அகலத்துடனும் பிரமாண்டமாக, ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது கோபுரம். இந்தக் கோபுரத்தின் இன்னொரு சிறப்பு... நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

சாரங்கபாணி கோயிலின் கோபுரம் குறித்த தகவல்களும் வரலாறும் மெய்சிலிர்க்கவைக்கின்றன.

கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோயில் கோபுரம் கட்டுவதற்குக் காரணமானவர் லக்ஷ்மி நாராயணன் எனும் பக்தர். தீவிர பெருமாள் பக்தரான இவர் பரம ஏழை. சதாசர்வ காலமும் பெருமாளையே நினைத்துக்கொண்டிருந்தார். ஆராவமுதனையே போற்றியபடி இருந்தார். சாரங்கா... சாரங்கா என்று அனுதினமும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஒருநாள்... ‘என் சாரங்கன் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு மிகப்பெரிய கோபுரம் எழுப்பவேண்டும்’ என்று நினைத்தார். ‘எப்படியாவது கட்டுவேன்’ என்று உறுதியானார். ‘நான் ஏழையாயிற்றே... என்னிடம் ஏது பணம்...’ என்றெல்லாம் எதிர்மறையாக அவர் யோசிக்கவே இல்லை.

பெருமாள் மீது மாறா பக்தி கொண்டிருந்தார். இப்போது கோபுரம் கட்டுவதற்கு பெருமாள் இருக்கிறார் என உறுதியாக நம்பினார். சோழ தேசத்திலேயே மிகப்பெரிய கோபுரம் எனும் அடைமொழியுடன் ஊர் ஊராகச் சென்றார். விவரம் சொல்லி நிதி திரட்டினார்.

தெரிந்தவர்களும் அறிந்தவர்களும் ஏதேதோ சொன்னார்கள். ‘வந்த பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையைத் தொடங்கு’ என்றார்கள். ‘திருமணம் செய்துகொள்’ என்று அறிவுறுத்தினார்கள். அவர்களின் பேச்சையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், தன் நிலையில் உறுதியாக இருந்தார். கோபுர நிதியைத் திரட்டுவதற்கு அலைந்தார்.
பொருள் சேரச்சேர, கோபுரப்பணியைத் தொடங்கினார். பணிகள் நடந்தன. நிதிகளும் வந்துகொண்டே இருந்தன. பதினோரு நிலை கோபுரமாக உயர்ந்து நின்றது. கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

இத்தகைய பெருமைக்கு உரியவர் லக்ஷ்மி நாராயணன் எனும் எளிமையான பக்தர். ஒருகட்டத்தில், லக்ஷ்மி நாராயணன் இறந்துபோனார். ஆலயத்தின் அர்ச்சகரின் கனவில், ‘என் கரத்திலிருந்து தர்ப்பை வாங்கி உத்தம பக்தருக்கு ஈமச்சடங்கினை செய்யுங்கள்’ என்று அருளினார் பெருமாள்.

அதன்படி, பெருமாளின் திருக்கரத்தில் இருந்து தர்ப்பையைப் பெற்றுக்கொண்டு, லக்ஷ்மி நாராயணனின் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன என்கிறது ஸ்தல வரலாறு.
இந்த வழக்கத்தின்படி, தீபாவளியையொட்டி அமாவாசை நன்னாளில், ஸ்ரீசாரங்கபாணி கோயிலில் லக்ஷ்மி நாராயணன் எனும் பக்தருக்கு சிராத்தம் செய்யப்படுவது இன்றைக்கும் வழக்கமாக, நடைமுறையில் இருக்கிறது.

குடந்தை சாரங்கபாணி திருத்தலத்துக்கு வந்து, கோபுரத்தையும் ஆராவமுதனையும் மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார பிரார்த்தனை செய்யுங்கள். நம்முடைய ஏழு ஜென்ம பாவங்களையும் போக்கி அருளுவார் சாரங்கபாணி பெருமாள்!

SCROLL FOR NEXT