புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் ஏகாதசி நாட்களிலும் திருநின்றவூர் பெருமாளையும் தாயாரையும் வணங்கினால், இழந்தது கிடைக்கப் பெறலாம். சர்ப்ப தோஷம் முதலானவை நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வைணவத் திருத்தலங்களில் அற்புதமான தலங்கள் பல்லாயிரம் உள்ளன. இவற்றில் திவ்விய தேசங்கள் என்றும் 108 வைணவத் திருத்தலங்கள் என்றும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயங்களாகப் போற்றப்படுகிற கோயில்கள் உள்ளன. இவற்றில், திருநின்றவூர் ஸ்ரீபக்தவத்சல பெருமாள் கோயிலும் ஒன்று.
சமுத்திர ராஜனுக்கும் மகாலக்ஷ்மியாகிய திருமகளுக்கும் இடையே கோபம். அப்படி சமுத்திரராஜனுடன் கோபித்துக் கொண்டு மகாலக்ஷ்மி எனும் திருமகள் நின்ற இடம்... திருநின்றவூர் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
அப்போது, சமுத்திரராஜன், திருமகளை எப்படியெல்லாமோ சொல்லி சமாதானப்படுத்த முயன்றார். ஆனல் எதையும் கேட்டு சமாதானமாகவில்லை. அப்போது சமுத்திரராஜன், ‘என்னைப் பெற்ற தாயே... மனமிரங்குவாயாக’ என்றார். பின்னர் ஒருவழியாக கோபம் தணிந்தார் மகாலக்ஷ்மி. திருமகள் நின்ற இடம் திருநின்றவூர் என்றானது. அதேபோல் இந்தத் தலத்தின் தாயாரின் திருநாமம் ஸ்ரீஎன்னைப் பெற்ற தாயார் என்றானது.
அற்புதமான திருத்தலம் திருநின்றவூர். இங்கே உள்ள பெருமாளின் திருநாமம் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள். ‘திருமகளின் கோபம் தணியவே இல்லை. நீங்கள்தான் அருள்புரியவேண்டும். அவளை அரவணைக்க வேண்டும்’ என சமுத்திரராஜன், மகாவிஷ்ணுவிடம் சென்று கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, திருமகள் நின்ற இடத்துக்கு மகாவிஷ்ணு வந்தார். பக்தனுக்காக பெருமாளே வந்தார். பக்தவத்சலப் பெருமாள் என்றானார். திருமகளை சமாதானப்படுத்தினார். திருமகளும் மனமிரங்கினார். மனம் மாறினார். கோபம் கரைந்தது. பின்னர், வைகுண்டத்துக்கு திருமகளுடன் சென்றார் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது திருநின்றவூர். இந்த சின்னஞ்சிறிய ஊரில், மிகப்பிரமாண்டமான ஆலயத்தில் குடிகொண்டிருக்கிறார்கள் என்னைப் பெற்ற தாயாரும் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளும்!
ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதி, இங்கே விசேஷம். சக்கரத்தாழ்வாரை தரிசிப்பதற்காகவே வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஆதிசேஷன், விஸ்வக்சேனர், ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள், முதலானோருக்கு சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.
’நம்மைப் பாடவில்லையே திருமங்கையாழ்வார்’ என்று என்னைப் பெற்ற தாயார் பக்தவத்சல பெருமாளிடம் சொல்ல, திருநின்றவூருக்கு வந்த திருமங்கை ஆழ்வார் திருவிடந்தை, மாமல்லபுரம் தலங்களுக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்தபடியே, திருநின்றவூர் பெருமாளுக்காக பாடல் ஒன்றைப் பாடினாராம் திருமங்கை ஆழ்வார்.
அப்போதும் திருப்தியாகவில்லை திருமகள். ‘ஒரேயொரு பாடல்தான் பாடினாரா?’ என்று கேள்வி எழுப்ப, திருக்கண்ணமங்கை தலத்தில் இருந்தபடியே இன்னொரு பாடலையும் மங்களாசாசனமாகப் பாடினார் திருமங்கை ஆழ்வார்.
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாளையும் என்னைப்பெற்ற தாயாரையும் துளசி மாலை சார்த்தி வணங்கிப் பிரார்த்தித்தால், குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். கணவன் மனைவி இணக்கத்துடன் வாழ்வார்கள். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.
மகாலக்ஷ்மி நின்ற இடம் திருநின்றவூர் என்பதால், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளுவார் திருமகள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் ஏகாதசி நாட்களிலும் திருநின்றவூர் பெருமாளையும் தாயாரையும் வணங்கினால், இழந்தது கிடைக்கப் பெறலாம். சர்ப்ப தோஷம் முதலானவை நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.