அகில உலக கத்தோலிக்கத் திருச்சபை நவம்பர் இரண்டாம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் தினமாகக் கொண்டாடுகிறது. எனவேதான், நவம்பர் மாதத்திலே ஆன்மாக்களுக்காக சிறப்பான வேண்டுதலும், ஆன்மாக்களை நினைத்து பல அடையாளச் செயல்களும் நிறைவேற்றப்படுகின்றன. இறப்பு என்பது, வாழ்வின் கொடுமையான நிகழ்வுகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நாம் அன்பு செய்கின்ற ஒருவரின் தற்காலிகப் பிரிவே, மனதில் கலக்கத்தை ஏற்படுத்தும். அப்படியிருக்கும் நாம் அன்பு செய்கிறவர்களின் நிரந்தரப் பிரிவென்பது நம்மால் தாங்கமுடியாத ஒன்றாகவே பெரும்பாலும் இருக்கிறது. கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை, மனிதர்களின் இறப்பு என்பது, மகிழ்ச்சியான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையும், நமது அன்புக்குரியவர்களின் மரணத்துக்காக அழுது அரற்றாமல், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதும், அவர்கள் வாழ்ந்து காட்டிய மதிப்பீடுகளை வாழ முற்படுவதும் தான், நாம் அவர்களுக்குச் செய்கிற சிறந்த உதவியாக இருக்கும். இதைத்தான் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா நமக்கு உணர்த்துகிறது. இறப்பு நமக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்க வேண்டும்? தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலே 1: 23 ல் கூறுகிறார். “உயிர்நீத்து கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்கிற ஆவல் என்னை வாட்டுகிறது”. நிலையான உலகத்திற்கான ஒரு பயணம் மரணமென்பது துன்பத்தி லிருந்து, மகிழ்ச்சியான வாழ்வுக்கான அடித்தளம். “கடவுள் மனிதர்களை இறவாமைக்கென்று படைத்தார்”. அழியாமையைப் பெற வேண்டுமென்றால், இந்த உடல் அழிந்துதான் ஆக வேண்டும். அழிவில் அழியாமையைப் பெறுகிறோம். இது உண்மையென்றால், மண்ணோடு மண்ணாக நாம் மட்கிப்போக மாட்டோம். நிச்சயம், உயிர்த்தெழுவோம்.” என்கிறது சாலமோனின் வசனம். “அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர்பெற்று எழுகிறது. மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக் குரியதாய் உயிர்பெற்று எழுகிறது”. ஆக, இறப்பு என்பது முடிவல்ல, அது நிலையான வாழ்விற்கான ஒரு தயாரிப்பு. எனவேதான் இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள, அனைத்து ஆன்மாக்கள் திருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது.