தை முதல் வெள்ளிக்கிழமை நன்னாளில், சக்தியாகிய அம்பிகையை, அம்மனைத் தரிசிப்போம். அருளும் பொருளும் அள்ளித்தருவாள் தேவி.
தை மாதம் வழிபாட்டுக்கு உகந்த மாதம். தை மாதத்தின் ஒவ்வொரு கிழமையும் விசேஷமானவை என்றும் இந்த நாட்களில், தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று தரிசிப்பதும், தெய்வங்களுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவதும் விசேஷமானவை என்றும் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள்தான். மகாலக்ஷ்மியை வணங்குவதற்கு உரிய நாட்கள்தான். குறிப்பாக, ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களுக்குச் செல்வதும் அம்மன் வழிபாடுகள் மேற்கொள்வதும் நம்மையும் நம் குடும்பத்தையும் வளமாக்கும். இல்லத்தில் நிம்மதியைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தை மாதம், குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில் பிறந்தது. தை மாதத்தின் இரண்டாம் நாளான இன்று தை வெள்ளிக்கிழமை. அம்பாளுக்கு உகந்த நன்னாளில், தேவியை தரிசனம் செய்யுங்கள். மாலையில் விளக்கேற்றி, அம்பாளுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்வது சகல நன்மைகளையும் தந்தருளும்.
லலிதா சகஸ்ர நாமம், கனகதாரா ஸ்தோத்திரம் முதலானவற்றை பாராயணம் செய்யுங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து நமஸ்கரித்து வழிபடுவது மகத்தானது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
தை முதல் வெள்ளியில் சர்க்கரைப் பொங்கலோ பாயசமோ நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கி மகிழுங்கள். அம்பாளின் அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறுவீர்கள்.
மாலையில் வீட்டில் பூஜையைச் செய்துவிட்டு, அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். நம் குலத்தையே காத்தருள்வாள் தேவி.