கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி பெருமாளையும் ஸ்ரீகோமளவல்லித் தாயாரையும் ஒருமுறையேனும் தரிசித்து மனதார வழிபட்டாலே... திருமணத் தடைகள் அகலும். இல்லத்தில் மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
தேவலோகப்பட்டணம், மந்திராதி தேவதா ஸ்தானம், க்ஷேத்ரஸாரம், சாரங்கராஜன் பட்டணம், பாஸ்கர க்ஷேத்திரம், திருக்குடந்தை, குடமூக்கு, தண்டகாரண்ய க்ஷேத்திரம் என்று கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி திருத்தலத்துக்கு ஏராளமான பெயர்கள் உண்டு. அதேபோல், இங்கே ஸ்ரீகோமளவல்லித்தாயாராக இருக்கும் ஸ்ரீலக்ஷ்மி பிராட்டிக்கும் ஸ்ரீசாரங்கராஜபெருமாளுக்கும் திருமணம் நடைபெற்ற திருத்தலம் என விவரிக்கிறது ஸ்தல புராணம். ஆகவே, இதனை கல்யாணபுரம் என்றும் அழைப்பார்கள்.
108 திவ்விய தேசங்களுள் குடந்தை சாரங்கபாணி திருக்கோயிலும் ஒன்று. இந்தத் தலத்தை உபயபிரதான திவ்விய தேசம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
கோயில் நகரம் கும்பகோணத்தில், ஊருக்கு மத்தியிலேயே அமைந்திருக்கிறது சாரங்கபாணி திருத்தலம். ‘சாரங்கபாணி திருக்கோயிலுக்கு செல்கிறேன்’ என்று மனதில் நினைத்தபடி, வீட்டில் இருந்து ஒரு அடி எடுத்துவைத்தாலே, அவர்களுக்கு மறுபிறவி இல்லாமல் முக்தியைத் தந்தருளுவார் ஸ்ரீசாரங்கபாணி என்று விவரிக்கிறது ஸ்தல புராணம்.
சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது ஆலயம். நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், ஸ்ரீஆண்டாள் முதலானோரால், ஆராவமுதன் மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்கிறார்.
மகாலக்ஷ்மி அவதரித்த திருத்தலம் என்பார்கள். பெருமாளை இங்கேயே அழைத்து திருமணம் புரிந்து கொண்ட தலமும் இதுவே! அதனால், ஸ்ரீகோமளவல்லித் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புடவை சார்த்தி மனதார வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.
இங்கே மூலவரின் திருநாமம் ஸ்ரீஆராவமுதப் பெருமாள். ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாள். உத்ஸவருக்கும் இதே திருநாமங்களே உள்ளன. எனவே, மூலவருக்கு உரிய மரியாதைகளும் சிறப்புகளும் வழிபாடுகளும் உத்ஸவருக்கும் உள்ளன என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஸ்ரீமகாலக்ஷ்மி அவதரித்த திருத்தலம் என்பதற்கு ஒரு சரிதமும் விவரிக்கிறது புராணம்.
பொற்றாமரைத் திருக்குளத்தில், கோமளவல்லியாக அவதரித்த மகாலக்ஷ்மி, ஹேம முனிவரின் மகளாக வளர்ந்தாள். இங்கே, இரண்டுபேரும் பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டார்கள். அதைக் கண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரணவ விமானத்தில் இருந்து வைதீக விமானம் என்று சொல்லப்படும் வைகுந்த விமானத்தைப் பிரித்துக் கொண்டு, சார்ங்கத்தைப் பிடித்தபடி இங்கே இந்தத் தலத்தில் வந்து இறங்கினாராம் பெருமாள். பின்னர் இங்கே, கோமளவல்லியைத் திருமணம் செய்துகொண்டார். அந்த விமானம், இன்றைக்கும் சாரங்கபாணி ஆலய விமானமாகத் திகழ்கிறது.
தவிர, ஹேம முனிவரின் தவத்துக்கு இணங்கி, வைகுண்டத்தில் இருந்து சார்ங்கத்துடன் திருமால் இந்தத் தலத்துக்கு வந்தார் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.
கும்பகோணத்தில் உள்ள ஆலயங்களிலேயே மிகப்பிரமாண்டமான ஆலயம், சாரங்கபாணி திருக்கோயில். கலைநயத்துடன் சிற்ப நுட்பத்துடன் உள்ள அற்புதமான ஆலயம்.
கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி பெருமாளையும் ஸ்ரீகோமளவல்லித் தாயாரையும் ஒருமுறையேனும் தரிசித்து மனதார வழிபட்டாலே... திருமணத் தடைகள் அகலும். இல்லத்தில் மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.