ஆன்மிகம்

 பொங்கலோ பொங்கல்; சூரியப் படையல்! 

வி. ராம்ஜி

உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்க நாளான பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். சூரியனாருக்கு வணக்கம் செலுத்துவோம். சூரிய பகவானை வணங்கிப் போற்றுவோம்!

உத்தராயன புண்ணிய காலம், தட்சிணாயன புண்ணிய காலம் என்றிருக்கிறது. ஆறு மாதம் தட்சிணாயன புண்ணியகாலம். மற்றொரு ஆறு மாதம் உத்தராயன புண்ணிய காலம். உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்கமே, தை மாதப் பிறப்பில் இருந்துதான் தொடங்குகிறது.

வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என தழைத்தோங்கிக் கிடக்கும் புண்ணிய பூமி இது!

வழிபாடுகள் பல முறைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. செளரம், சைவம், கெளமார, வைஷ்ணவம், காணாபத்யம், சாக்தம் என்று வழிபாட்டு முறைகள் உள்ளன. அதாவது, சௌரம் (சூரிய வழிபாடு), சைவம் (சிவ வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), வைஷ்ணவம் (விஷ்ணு வழிபாடு) என ஆறு வகையான வழிபாட்டு முறைகள் உள்ளன என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இவற்றில் ஒன்றை பின்பற்றி, அதன்படி ஒரே தெய்வத்தின் திருவடியை நாடி வழிபடுபவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் ஆறு வகை வழிபாட்டுக்காரர்களும் ஏற்றுக் கொண்ட தெய்வம்... சூரிய பகவான். இன்னும் எளிமையாகச் சொல்லப் போனால், நாம் அனுதினமும் நம் கண்ணெதிரே, நம் வீட்டுக்கு முன்னேயே தரிசிக்க முடிகிற தெய்வமும் இவர்தான்! விடியலுடன் தொடர்பு கொண்ட சூரியனாரை முன்னிறுத்திக் கொண்டாடுகிற பண்டிகைதான், பொங்கல் நன்னாள்!

விடியலுக்கும் சூரியனாருக்கும் தொடர்பு உண்டு. அதேபோல், தை மாதப் பிறப்பில் பொங்கல் பண்டிகை நன்னாளும், மாதப் பிறப்பு நாளில் வருகிறது.

சூரியன், தன் பாதையில் மகர ராசியில் பிரவேசிப்பது ‘மகர ரவி’ எனப்படும். அதுவே உத்தராயன புண்ய காலம் எனப்படுகிறது. உத்தர அயனம் என்றால், வடக்குப்புற வழி, வடக்கு வாசல் என்று பொருள். சூரியன், கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்றாலும், தட்சிண அயனம் எனும் காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தர அயன காலத்தில் சற்று வடக்குப் புறமாகவும் சஞ்சரிக்கிறார் சூரிய பகவான்!

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி எனும் ஆறு மாதங்களும் உத்தராயண புண்ய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் என்றும் சொல்லப்படுகிறது.
மங்கலகரமான காரியங்களைச் செய்ய உத்தராயனமே சிறந்த காலம் என்கிறது புராணம். ஒருவருக்கு மரணம் என்பது கூட உத்தராயனத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான், தட்சிணாயன காலத்தில் பாரதப்போரில் அடிபட்டுக் கீழே விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயன புண்ய காலம் வரும் வரை காத்திருந்தார். பின்னரே இறந்தார் என்கிறது பீஷ்ம புராணம்!

இத்தனைப் பெருமைகள் மிகுந்த உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்க நாளான பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். சூரியனாருக்கு வணக்கம் செலுத்துவோம். சூரிய பகவானை வணங்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT