ஆன்மிகம்

ஏற்றமும் மாற்றமும் தரும் அனும மந்திரம் - அனுமன் ஜயந்தி ஸ்பெஷல்

வி. ராம்ஜி

அனுமனை வழிபட்டு வந்தால், சனி பகவான் தருகிற கெடுபலன்களில் இருந்து விடுபடலாம். தப்பிக்கலாம். அனுமனின் பக்தர்களை சனி பகவான் நெருங்கமாட்டார். ஹனுமன் ஜயந்தி நன்னாளில், அவரின் காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குங்கள். வழிபடுங்கள். நம்மை அனைத்து இன்னல்களில் இருந்தும் காத்தருளுவார் அனுமன். 12.1.2021 அனுமன் ஜயந்தித் திருநாள்.

நமக்கு நடக்கின்ற நல்லது கெட்டது என சகலத்திற்கும் கிரகங்களின் ஆதிக்கமே காரணம். மொத்தம் ஒன்பது கிரகங்கள் உள்ளன. இதைத்தான் நவக்கிரகம் என்று சுற்றி வந்து வணங்குகிறோம். நவக்கிரகங்களில் மிக மிக சக்தி வாய்ந்த கிரகம் என்று சனி பகவானைத்தான் சொல்கிறது புராணம். குருப்பெயர்ச்சியை விட, ராகு கேது பெயர்ச்சியை விட, சனிப்பெயர்ச்சிக்கு அதனால்தான் மிக மிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

‘இந்த சனிப்பெயர்ச்சி நமக்கு என்னாகுமோ, எந்த மாதிரியான பலன்களைத் தருமோ’ என்று தவித்து மனமுருகி பிரார்த்தனை செய்கிறோம். சனி பகவான் என்பவரை நீதிமானாகவும் நீதிபதியாகவும் சொல்கின்றன ஞான நூல்கள். நாம் முந்தைய பிறவியில் என்னென்ன செய்திருக்கிறோமோ அதன்படியே இந்தப் பிறவியில் நமக்கு நல்லதுகெட்டதுகளை தராசு முள் போல் இருந்து, நல்லதையும் கெட்டதையும் தந்தருளுகிறார் சனிபகவான்.

அதுமட்டுமின்றி, நம் ஆயுளை தீர்மானிப்பவரும் சனி பகவான் தான். சனிப் பெயர்ச்சியால், சனி தசையால், நமக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்றும் கெடுபலன்களும் துக்கங்களும் நிகழ்ந்துவிடக்கூடாது என்றும் நாம் சனீஸ்வர பகவானைப் பிரார்த்திப்போம். சனீஸ்வரருக்கு உரிய தலங்களுக்குச் சென்று வழிபடுவோம்.

சனி பகவானை வணங்கி வழிபடுகிற அதே தருணத்தில், நாம் எப்போதும் வணங்க வேண்டியவர் அனுமனை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அனுமனின் பக்தர்களை சனீஸ்வரர் தாக்கமாட்டார். மாறாக, அவர்களுக்கு உண்டான கெடுபலன்களையெல்லாம் குறைத்து, வாழ்வில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் தந்தருளுவார் என்கிறார்கள்.

அனுமனை தரிசிப்பதும் வணங்குவதும் நம்முடைய கோரிக்கைகளை அவரிடம் சமர்ப்பிப்பதும் மிகுந்த நன்மைகளைத் தரும். அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தலாம். துளசி மாலை சமர்ப்பிக்கலாம். வடை மாலை சார்த்தி வழிபடலாம். ஸ்ரீராம ஜெயம் எழுதி, அதை மாலையாக்கி வணங்கலாம்.

ஆஞ்சநேயரின் மூலமந்திரத்தைச் சொல்லி அனுமனை வழிபடுவது இன்னும் மகத்துவம் வாய்ந்தது. மகிமை மிக்கது. தினமும் அனுமன் மூலமந்திரம் சொல்லி வழிபடலாம். புதன் கிழமையிலும் சனிக்கிழமையிலும் அருகில் உள்ள அனுமன் கோயிலுக்கோ அனுமன் சந்நிதி கொண்டிருக்கும் கோயிலுக்கோ சென்று அனுமனை தரிசிப்பது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கவல்லது.

அனுமனின் மூல மந்திரம் :

ஹங் ஹனுமதே
ருத்திராத்மஹே ஹூங் பட்

இந்த மந்திரத்தை தினமும் 11 முறையேனும் சொல்லி வழிபடுங்கள். புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் 108 முறை இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
உங்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் குடும்பத்துக்கும் எந்தக் கெடுதலும் வராமல், எந்த தீயசக்தியும் உங்களைத் தாக்காமல் அருளிக்காப்பார் ஆஞ்சநேயர்.

அனுமன் ஜயந்தி நாளில் (12.1.2021) செவ்வாய்க்கிழமையில்... அனுமனை தரிசிப்போம். அனும மந்திரம் சொல்லி வேண்டுவோம். வாழ்வில் நல்ல நல்ல ஏற்றங்களையும் மாற்றங்களையும் தந்தருளுவார் அனுமன்.

SCROLL FOR NEXT