ஆன்மிகம்

கூடாரவல்லியில் ஆண்டாளை கொண்டாடுவோம்!  

வி. ராம்ஜி

கூடாரவல்லி தினம் என்றால், கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக ஆண்டாள் உறுதியாக நமக்கெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்திய நன்னாள். ஜீவாத்மா - பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வது உறுதி என்பதை நிரூபித்த வைபவம்... கூடாரவல்லி திருநாள். இன்று கூடாரவல்லித் திருநாள்.

எனவே இந்த நாளில், அனைவரும் இல்லங்களிலும் அருகில் உள்ள கோயில்களிலும் அக்கார அடிசில் செய்து, பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைத்து, அக்கம்பக்கத்தார் அனைவருக்கும் பக்தர்களுக்கும் வழங்கி மகிழுங்கள்.
இந்த நன்னாளில், பெண்கள் புத்தாடை அணிந்து கொள்வதும் அணிகலன்கள் அணிந்து கொள்வதும் சுபிட்சத்தைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஆண்டாளின் மன விருப்பத்தை ஸ்ரீமந் நாராயணன் நிறைவேற்றித் தந்தருளியது போல், நம் விருப்பங்களை அந்த ஆண்டாளே நிறைவேற்றி அருள்வாள் என்பதாக ஐதீகம். .

முடிந்தால், ஆண்டாளுக்கு புடவை சார்த்துங்கள். இன்னும் குதூகலமாகிவிடுவாள். ரோஜாவும் சாமந்தியும் முல்லையும் தாமரையும் என மலர்கள் சூட்டி, அந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடியை அலங்கரியுங்கள். இதில் மகிழ்ந்து அருளுவாள் ஆண்டாள். மாங்கல்ய பலம் கொடுப்பாள். மாங்கல்ய வரம் தருவாள்.

’மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேரோ லெம்பாவாய்’ எனும் பதத்தின் மூலம், ஆண்டாள் உலக ஒற்றுமையை சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறாள். அதாவது இறைவன் முன்னே அனைவரும் சமம் எனும் உணர்வை வலியுறுத்தியவள் ஆண்டாள். நமக்கெல்லாம் வழிகாட்டியாக, பெண்களுக்குத் தலைவியாகத் திகழ்பவள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

அதன் பொருட்டே, மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் அருளிய திருப்பாவையும் பிரபந்தப் பாசுரங்களும் பாடப்படுகின்றன. பிறகு பக்தர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருந்து (இதை கோஷ்டி விநியோகம் என்று சொல்லுவார்கள்) பிரசாதங்களை விநியோகம் செய்யும் மரபு உண்டாயிற்று. அந்த தருணத்தில், உயர்ந்தவர், தாழ்ந்தவர், அறிவுடையார், அறிவிலார், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல், அனைவரும் ஒன்றாகப் பாடி பகவானுக்கு அமுது செய்து, அதைப் பிரசாதமாக்கி அனைவருக்கும் வழங்கி மகிழும் வழக்கம், ஆண்டாளால்தான் நிகழ்ந்தது என்கிறார் மதுரை அழகர் கோவில் அம்பி பட்டாச்சார்யர்.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கேகண்ணி உகந்தளித்தாள் வாழியே!

இன்று மார்கழி 27ம் தேதி, கூடாரவல்லித் திருநாள். ஆண்டாளைக் கொண்டாடுவோம். வணங்குவோம். வரங்களைப் பெறுவோம்!

SCROLL FOR NEXT