கோவையின் மிக முக்கியமான திருத்தலம் பேரூர். புராண புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம். சிற்ப நுட்பங்களுடன் கூடிய சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அற்புதத் திருத்தலம் என்று பேரூர் சிவாலயத்தைச் சொல்லி சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.
இங்கே உள்ள சிற்பங்கள், ஒவ்வொன்றும் வியக்கவும் பிரமிக்கவும் வைக்கும். தட்சன் செய்த யாகத்தில் சிவனாருக்கு அவிர்பாகம் கொடுக்கவில்லை என்று கோபமுற்றார் சிவனார். அப்போது வீரபத்திரராக உருவம் கொண்டார். தட்சனின் யாகத்தை அழித்தார். அரக்கனின் தலையில் திரிசூலம், தலைமாலை, குண்டலம், சர்ப்ப குண்டலம் என்று அக்னி வீரபத்திரரின் சிற்பங்கள் அற்புதமாக வடிக்கப்பட்டிருப்பதை இங்கே இந்தத் தலத்தில் காணலாம்.
அதேபோல், தட்சனின் யாகத்துக்குப் பிறகு அருள்புரிந்த அகோர வீரபத்திர மூர்த்தி, தன் வலது திருக்கரத்தில் வாள், மற்ற திருக்கரங்களில் மான், வில், கேடயம் முதலானவற்றுடன் காட்சி தரும் சிற்பம் பிரமிக்க வைக்கிறது.
பேரூர் திருத்தலத்தின் இறைவன் பட்டீஸ்வரர். காமதேனு, பட்டி உள்ளிட்ட பசுக்கள் வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம் என்கிறது ஸ்தல புராணம். சாந்நித்தியமான திருத்தலம். தெய்வங்களும் தேவர்களும் முனிவர் பெருமக்களும் வழிபட்ட திருத்தலம்.
இந்தத் தலத்தில், சிற்பங்களைக் காண, நாள் போதாது. கஜாசுரன் எனும் அரக்கன், பிரம்மாவிடம் வரம் பெற்றான். அகங்காரத்தாலும் ஆணவத்தாலும் தேவர்களையும் முனிவர்களையும் ஆட்டிப் படைத்தான். துன்புறுத்தினான். கலங்கிப் போனவர்கள் சிவனாரிடம் முறையிட்டு அழுதார்கள்.
கஜாசுரனை அழிக்க முற்பட்டார் சிவனார். யானை உருவம் எடுத்தான். அவனை, யானையாக வந்தவனை, அப்படியே சாய்த்தார். யானையின் தலையில் தன்னுடைய இடதுகாலால் யானையின் தோலை அப்படியே உரித்தார். அந்த யானையின் தோலை அப்படியே தன் உடலில் போர்த்திக் கொண்டார்.
யானையின் கால்கள், வால், இறைவனின் சிரசில் உள்ள கங்கை, தலைமாலை, திரிசூலம் முதலானவை வெகு சிறப்புடன் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. சிற்பத்தில் யானையின் தோலை உரிப்பதற்கான புஜ பலம் காட்டும் தோரணையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
பேரூர்த் தலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் அழகுற அமைந்திருக்கின்றனர். மேலும் கோயிலின் ஸ்தல புராணத்தை விவரிக்கும் ஓவியங்களும் கொள்ளை அழகுடன் திகழ்கின்றன.
பேரூர் திருத்தலத்துக்கு வந்து பட்டீஸ்வரரை கண்ணார தரிசித்து, சிற்பங்களை, கலை நுணுக்கங்களை வியந்து மகிழுங்கள்.