ஆன்மிகம்

ஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்; மோட்சம் நிச்சயம்! 

வி. ராம்ஜி

இந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையும் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்!

உலகின் எல்லா மனிதர்களும் தன் பிறவியில் எதிர்பார்ப்பது மோட்சத்தைத்தான். அப்படி மோட்சம் தரும் திருத்தலங்கள் ஏழு உள்ளன. அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி, துவாரகா. இந்த மோட்ச தலங்களில் மிக முக்கியமான க்ஷேத்திரம் காசி மாநகரம்.

‘கஸ்’ என்றால் ஒளிர்தல் என்று அர்த்தம். இதுவே காசி என மருவியதாகச் சொல்வர். நகருக்கே தெற்கே அஸி நதியும் வட கிழக்குப் பகுதியில் வருணை நதியும் கங்கையுடன் கலப்பதால் இந்தத் திருத்தலம் வாரணாசி என்றும் அழைக்கப்படுகிறது.

அற்புதமான க்ஷேத்திரம் காசி. காசிக்கு நிகரான திருத்தலங்கள் என்று பல தலங்களைச் சொல்லுவோம். ஆனால் காசிக்கு முந்தைய உதாரணமாக எந்தத் தலத்தையும் சொல்ல இயலாது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

கிருதயுகத்தில் திரிசூல வடிவம் என்றும் திரேதா யுகத்தில் சக்கர வடிவம் என்றும் துவாபர யுகத்தில் தேர் வடிவம் என்றும் கலியுகத்தில் சங்குவடிவம் என்றும் காசி மாநகரம் திகழ்கிறது என்கிறது ஸ்தல புராணம்.

சிவபெருமானும் உமையவளும் திருமணம் முடிந்ததும் காசியம்பதிக்கு வந்தனர். பிரளய காலத்தில் அழியாமல் இருந்தது காசியம்பதி. அவர்கள் கால் ஊன்றிய தலம் காசி என்று போற்றப்படுகிறது. காசியம்பதியில் உயிர் துறப்பவர்களின் செவிகளில், காசி விஸ்வநாதர் பிரணவ மந்திரத்தை ஓதி, மோட்சம் அடையச் செய்கிறார் என்கிறது காசி புராணம்.

இங்கே... காசியம்பதியில், ஒன்றல்ல இரண்டல்ல... பல கோடி சிவலிங்கங்கள் இருக்கின்றன இருக்கின்றன என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கிறது. காசிக்கு வந்து கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை மனதாரப் பிரார்த்தித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

அருந்ததனா, சுதர்சனா, பிரம்மாவதாரா, சுதர்சனா, ராமநகரா, மாளநி, பூபவதி, காசிபுரா, காசியம்பதி, கேதுமதி என காசிக்கு பல பெயர்கள் உண்டு. ‘முந்தைய ஜென்மங்களில் எண்ணிக்கையில்லா ஆலயங்களுக்கு சென்று வழிபட்டவர்களுக்கே இந்த ஜென்மத்தில் காசி நகரின் கதவுகள் திறக்கும்’ சிவமகா புராணம்.

காசி திருத்தலத்தில், பதினோரு சுயம்பு லிங்கங்கள் உள்ளன. தேவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 46 சிவலிங்கங்கள் உள்ளன. முனிவர்களும் யோகிகளும் 47 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்துள்ளனர். நவக்கிரகங்கள் வணங்கி வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள் உள்ளன. சிவகணங்கள் 40 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டன. சிவனடியார்களும் பக்தர்களும் 295 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செது வழிபட்டனர். காசி திருத்தலத்தில் மேலும் 65 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன காசியின் பிரமாண்டத்தை விவரிக்கிறார்கள் பக்தர்கள்.

இந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையும் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்!

SCROLL FOR NEXT