தேய்பிறை அஷ்டமியில், பைரவ காயத்ரி ஜபித்து பைரவரை வணங்குங்கள். செவ்வரளி மலர் சூட்டி வழிபடுங்கள். சிக்கல்களும் எதிர்ப்புகளும் தீரும். மனோபலம் பெருகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
வழிபாடுகளில், துர்கை வழிபாடு, வராஹி வழிபாடு, பைரவர் வழிபாடு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
சிவாலயங்களில் உள்ள துர்கை, உக்கிர தெய்வமாகத் திகழ்கிறாள். துர்கை என்றாலே துக்கத்தைப் போக்குபவள் என்று அர்த்தம். எதிரிகளை சம்ஹாரம் செய்வதற்காக உருவெடுத்தவள் என்கிறது புராணம்.
இதேபோல், வராஹி தேவி, சப்தமாதர்களில் ஒருத்தி. சப்தமாதர்களில் சேனைத்தலைவியாகவும் பராசக்தியின் படைக்கு தலைவியாகவும் திகழ்ந்து, போரிட்டு அசுரக்கூட்டத்தை அழித்தொழித்தவள்.
பைரவரையும் இவ்விதமாகவே சிவபெருமான் சிருஷ்டித்தார் என்கிறது சிவபுராணம் .பைரவரும் உக்கிரமூர்த்தியாகத்தான் காட்சி தருகிறார். துர்குணங்கள் உள்ளவர்கள், அடுத்தவர் சொத்துக்கள் மீது ஆசைப்படுவோர், துரோகங்கள் செய்பவர்கள் என எவரும் பைரவரை நெருங்கவே முடியாது. பைரவ வழிபாட்டில் ஈடுபடவே முடியாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதனால்தான் எல்லோரும் ஒதுக்குகிற ராகுகாலத்தில் துர்கையை வழிபடுகிறோம். ராகுகாலத்தில் துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுகிறோம். அதேபோல், அஷ்டமி நாளை எல்லோருமே புறக்கணிப்போம். ஆனால் காலபைரவரை அஷ்டமியில்தான் வழிபடுகிறோம்.
அஷ்டமி... பைரவருக்கு உகந்த நாள். தேய்பிறை அஷ்டமி இன்னும் சிறப்புக்கு உரிய, வழிபாட்டுக்கு உரிய நாள். இந்த நாளில், பைரவரை வணங்கி வழிபடுவோம். குறிப்பாக, பைரவரின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபடுவோம்.
பைரவ காயத்ரி :
ஓம் காலகாலாய வித்மஹே
காலஹஸ்தாய தீமஹி
தந்நோ காலபைரவ ப்ரசோதயாத்
தேய்பிறை அஷ்டமியில், பைரவ காயத்ரி ஜபித்து பைரவரை வணங்குங்கள். செவ்வரளி மலர் சூட்டி வழிபடுங்கள். சிக்கல்களும் எதிர்ப்புகளும் தீரும். மனோபலம் பெருகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
நாளைய தினம் 6ம் தேதி புதன்கிழமை, தேய்பிறை அஷ்டமி.