ஆன்மிகம்

தேய்பிறை அஷ்டமியில் பலம் தரும் பைரவர் வழிபாடு

வி. ராம்ஜி

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குவோம். எதிரிகள் பலமிழப்பார்கள். நம் காரியங்கள் யாவையும் பலமாக்கித் தந்தருள்வார் பைரவர். 6ம் தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி.

திதிகளில் ஏகாதசி திதி பெருமாள் வழிபாட்டுக்கு உரியது. அதேபோல் திரயோதசி திதி சிவ வழிபாட்டுக்கு உரியது. இதுவே பிரதோஷ வழிபாடாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதனால்தான் ஏகாதசியில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடத்தப்படுகின்றன. சிவாலயங்களில், நந்திதேவருக்கும் சிவலிங்கத்திருமேனிக்கும், பிரதோஷ நன்னாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அதேபோல், சதுர்த்தி திதியில் விநாயகர் வழிபாடு விமரிசையாக நடைபெறும். இதை சங்கடஹர சதுர்த்தி என்று வழிபாடு செய்கிறோம். அதேபோல், சஷ்டி திதியில் முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொண்டு முருகக் கடவுளை தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்.

ஏகாதசியைப் போலவே துவாதசி திதியிலும் பெருமாள் வழிபாடு விசேஷமானது. பஞ்சமி திதியில் வாராஹி வழிபாடு மிக மிக உன்னதமானது. வாராஹி தேவியை, செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.

இதேபோல, அஷ்டமி திதி என்பது பைரவருக்கான நாள். பைரவருக்கு உகந்த நாள். அஷ்டமியில் பைரவ வழிபாடு என்றே சொல்லுவார்கள். மேலும் கலியுகத்துக்கு காலபைரவர் என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.

பைரவருக்கு அனைத்து சிவாலயங்களிலும் சந்நிதி அமைந்துள்ளது. சிவனாரின் சந்நிதிக்குச் சென்று சிவபெருமானை தரிசித்துவிட்டு, பிராகாரத்தில் விநாயகப் பெருமானை தரிசிப்போம். அடுத்து முருகப்பெருமானின் சந்நிதி அமைந்திருக்கும். அவரைத் தரிசித்துவிட்டு வந்தால் கஜலட்சுமியின் சந்நிதி இருக்கும்.

பிறகு சண்டிகேஸ்வரர் சந்நிதியும் துர்கையின் சந்நிதியும் அமைந்திருக்கும்.இதையடுத்து காலபைரவரின் சந்நிதியும் சூரிய பகவானின் சந்நிதியும் காட்சி தரும்.
தேய்பிறை அஷ்டமியில், பைரவருக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. பைரவருக்கு எலுமிச்சை மாலை, வடை மாலை சார்த்தி வேண்டிக்கொள்கிற பக்தர்களும் இருக்கிறார்கள்.

பைரவருக்கு உகந்தது செந்நிறம். எனவே பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளலாம். அதேபோல், தயிர்சாதமும் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம்.

முக்கியமாக, பைரவரை பிரார்த்தித்துக் கொண்டு, தெருநாய்களுக்கு உணவளிப்பதும் பிஸ்கட் வழங்குவதும் நம் பாவங்களையெல்லாம் போக்கும்; எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும் என்பது ஐதீகம். மனோபலம் தந்தருள்வார் பைரவர். கஷ்டங்களையெல்லாம் நீக்கி அருளுவார் பைரவர்!

6ம் தேதி புதன்கிழமை அஷ்டமி. பைரவர் வழிபாட்டுக்கு உரிய நாள்.

SCROLL FOR NEXT