காரைக்கால் மேடு புகழ்பெற்ற ரேணுகாதேவி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால் குடம் எடுத்து இன்று வழிபாடு நடத்தினர்.
காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் சிறப்புமிக்க ரேணுகாதேவி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குடமுழுக்கு மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. இதையொட்டியும், சுனாமி போன்ற பேரழிவு வராமல் மக்களைக் காக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் உத்திரம் நட்சத்திர நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு இன்று (ஜன.5) காலை நடைபெற்ற நிகழ்வில், சித்தி விநாயகர் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பால் குடம் எடுத்து ஊர்வலமாக ரேணுகாதேவி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். தொடர்ந்து அம்மனுக்குப் பால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.
விழாவையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது. பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள், விழாவில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளைக் காரைக்கால் மேடு மீனவ கிராமப் பஞ்சாயத்து நபர்கள் செய்திருந்தனர்.