எத்தனையோ சித்தர் பெருமக்களும் ஞானிகளும் முனிவர் பெருமக்களும் சிவபெருமானையே நினைத்து தவமிருந்தனர். சிவனருள் ஒன்றையே வேண்டி தவம் மேற்கொண்டனர். அப்படியான சித்தபுருஷர்களில் முக்கியமானவர் திருமூலர்.
திருமூலர் தன் தவத்தில் இருந்து வருடத்துக்கு ஒருமுறை எழுது வந்து ஒருபாடலை இயற்றி அருளினார் என்றும் இப்படி வருடத்துக்கு ஒன்றாக அவர் இயற்றித் தந்த பாடல்களே திருமந்திரம் என்று போற்றப்படுகிறது.
வேதங்களுக்கு இணையாகவும் உபநிஷங்களுக்கு இணையாகவும் போற்றப்படுகிறது திருமந்திரம். திருமூலர் தவமிந்த திருத்தலம் ஆடுதுறை என்றும் திருவாவடுதுறை ஆலயம் முன்பொரு காலத்தில் வனமாகத் திகழ்ந்தது என்றும் அங்கே மரத்தடி ஒன்றில் தவமிருந்து திருமந்திரத்தை இயற்றினார், சிவனருளைப் பெற்றார் என்கின்றன ஞானநூல்கள்.
யோக சூத்திரங்களில் இந்த நூல் பதஞ்சலி முனிவரின் வடமொழி பாடல்களுக்கு இணையானது என்பார்கள்.
"பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
அய்யன் மற்றும் இதர சித்தர்கள் எழுதும் மந்திரங்கள் அகத்தில் இருந்து வருவது. அகத்திலிருந்து வரும் போதமே அகவல் என்றும் புறத்திலிருந்து வரும் கருத்துகள் வெறும் தகவலாக மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள் சிவனடியார்கள்.
உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தவர்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலன் ஐந்தும் காணா மணி விளக்கே
என்று பாடியுள்ளார்.
தில்லை எனப் போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தை இதை உணரலாம். சிலிர்க்கலாம். சிதம்பரம் திருத்தலத்தின் கட்டுமானம் என்பது நம்மை நமக்கு உணர்த்துகிற தத்துவம் என்கிறார்கள் சிவனடியார்கள்.
தில்லை பொன்னம்பலம் மேல் உள்ள தங்க ஓடுகளின் எண்ணிக்கை 21,600. இது நமது சுவாச காற்றுக்கு இணையாகச் சொல்லப்படுகிறது. அதன் மேல் பொருந்திய தங்க ஆணிகள் மொத்தம் 72000. இது நமது நாடிக் கணக்கு. வெட்டவெளி என்னும் ஆகாயத் தலத்தில் பொன்னம்பல மேடையில் சிவசக்தி தாரணை பிரதான ரகசியமாய் வெளியாகிறது. இதுவே நம்முள் இருக்கும் சொர்ண தத்துவம். இப்படியான சொர்ணமான உத்தமன் நமக்கு உள்ளேயே இருக்க, இறைவனை வெளியே விடாமல் பலகாலம் வேண்டுவோம் என்று திருமூலர் அதற்கான வழியையும் சொல்கிறார்.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
உயிர் வளர்த்து நாம் காணும் இறைவன் என்ன உணர்வுடன் இருக்கிறான்? அவனும் அன்பும் ஒன்று தான் வேறு வேறு இல்லையென்று திருமூலர் தெளிவாகக் கூறுகிறார்
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
என்று பாடியுள்ளார். ஆகவே, நாம் உயர் நிலை வந்தால்தான் அன்பு வருமா ? அல்லது அன்பு வந்தால் தான் உயர் நிலை வருமா ? குழப்பம் வேண்டாம் கீழே பாருங்கள்.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
வில்வதையோ, துளசியையோ, அருகம்புல்லையோ கொண்டு இறைவனுக்கு நம்முடையய அன்பைச் செலுத்துவோம். பசுவிற்கு ஒரு வாய் புல் அன்புடன் கொடுப்போம். உண்ணும்போது ஒரு கவளத்தை முன் வாசலிலோ பின்புறமோ மற்ற உயிரினத்துக்கு அன்போடு வழங்குங்கள். நம்மைச் சுற்றி இருக்கும் பிறர்க்கு அன்புடன் இன்சொல்லைக் கூறுங்கள்.
இதுவே பேரன்பு. இவற்றைச் செய்து வந்தாலே இறைவனின் அருளைப் பெற்றுவிடலாம். தெய்வ அருள் கிடைத்துவிட்டால், சித்தர் பெருமக்களின் முனிவர் பெருமக்களின் யோகிகளின் பேரன்பு நமக்குக் பூரணமாகக் கிடைத்துவிடும். இவையெல்லாம் கிடைத்துவிட்டால், தன்னைத் தான் அறியும் ஆசியும் வழியும் கிடைத்துவிடும் என்கிறார்கள் சிவனடியார்கள்!
திருமூலர் அருளிய திருமந்திரம் பாராயணம் செய்வோம். திருமந்திரத்தையே வாழ்க்கையெனக் கொண்டு சிவத்தை பூஜித்து வாழ்வோம்!