ஆன்மிகம்

மார்கழி சஷ்டியில் கந்தசஷ்டி கவசம்! 

வி. ராம்ஜி

மார்கழி மாதத்தின் சஷ்டியில் முருகப்பெருமானை மனதார வழிபடுங்கள். மங்கல காரியங்களை இல்லத்தில் நடத்தித் தருவார் வேலவன். தடைகளை நீக்கி காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார் வெற்றிவேலன்.

முருகப்பெருமானை இஷ்டதெய்வமாகவும் குலதெய்வமாகவும் கொண்டு வழிபடும் முருக பக்தர்கள் ஏராளம். சுவாமிமலை முருகனை குலதெய்வமாகக் கொண்டவர்கள், தங்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால், அவர்களுக்கு சுவாமிநாதன் என்றே பெயர் சூட்டுவார்கள்.

மாதத்தில் வருகிற கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நன்னாளாகப் போற்றப்படுகிறது. கார்த்திகேயனை அன்றைய நாளில் விரதமிருந்து வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.

அனைத்து சிவாலயங்களிலும் முருகக் கடவுளுக்கு சந்நிதி உண்டு. அம்மன் கோயில்கள் பலவற்றிலும் முருகப்பெருமான் சந்நிதி அமைந்திருக்கிறது.
அதேபோல், செவ்வாய்க்கிழமை என்பது கந்தனை வணங்குவதற்கு உகந்தநாள். செவ்வாய் பகவானுக்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய்க்கிழமைகளில் முருகக் கடவுளை தரிசித்து வேண்டிக்கொள்வதும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்வதும் சகல தோஷங்களையும் நீக்கவல்லது. குறிப்பாக, செவ்வாய் தோஷம் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் என்பது பூஜைகளுக்கு உரிய மாதம். ஜபதபங்கள் செய்வதற்கு உரிய மாதம். இந்த மாதத்தை தனுர் மாதம் என்று போற்றுகிறது சாஸ்திரம்.

மார்கழி மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் சக்தி வாய்ந்தவை. பூஜைகள் இன்னும் வலிமையை தரக்கூடியவை. பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். கலை, கல்வி, செல்வம், தொழில், உத்தியோகம், தேக ஆரோக்கியம் முதலான விஷயங்களுக்காக தனுர் மாதம் என்று சொல்லப்படுகிற மார்கழி மாதத்தில் மனமுருகி பிரார்த்தனைகள் செய்வது மகத்தான பலன்களைத் தரும் என்கிறார்கள் பக்தர்கள்.

முக்கியமாக, சஷ்டி தினம் விசேஷமானது. அதிலும் மார்கழி சஷ்டி என்பது மகத்தானது. இன்று 4ம் தேதி சஷ்டி. இந்த நாளில், முருகப்பெருமானை வணங்குவோம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டிக்கொள்வோம். வீட்டில் விளக்கேற்றி கந்தனிடம் நம் கவலைகளைச் சொல்லி முறையிடுவோம். அருகில் உள்ள முருகன் கோயிலுக்கோ அல்லது முருகப்பெருமான் சந்நிதிக்கோ சென்று, செவ்வரளி மாலை சாற்றி வேண்டிக்கொள்வோம்.

SCROLL FOR NEXT