ஆன்மிகம்

மார்கழி ஞாயிறு... பலம் தரும் ஆதித்ய ஹ்ருதயம் 

வி. ராம்ஜி

பலம் தரும் ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தைச் சொல்லுவதும் கேட்பதும் மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வழிபாடுகளில் சூரிய நமஸ்காரத்துக்கு இணை ஏதுமில்லை என்பார்கள். சூரிய நமஸ்காரம் மனோபலம் தரக்கூடியது. சூரிய கிரண சக்திகள் நம் தேகத்தில் படுவது தேகத்துக்கு ஆரோக்கியத்தையும் தந்தருளக் கூடியது.

நவக்கிரகங்களில் சூரிய பகவானும் ஒருவர். எல்லா சிவாலயங்களிலும் சூரிய பகவானுக்கும் தனிச்சந்நிதி உண்டு. சிவனாரை வழிபட்டு பிராகாரமாகச் சுற்றி வரும் போது, விநாயகர், முருகப்பெருமான், கஜலக்ஷ்மி, துர்கை, சண்டிகேஸ்வரர் முதலான சந்நிதிகளை தரிசனம் செய்துவிட்டு வந்தால், பைரவரையும் சூரிய பகவானையும் தரிசிக்கலாம்.

பல வழிபாடுகளில், சூரியனும் பங்கு வகிக்கிறது. சூரிய வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. தினமும் காலையில் எழுந்து குளித்து விட்டு நீராடியதும் சூரிய நமஸ்காரம் சொல்லி பிரார்த்தனையையும் பூஜையையும் செய்யச் சொல்கிறது சாஸ்திரம்.

நதியில் நீராடுவது புண்ணியம். எல்லா நதிகளுமே புண்ணிய நதிகளாக போற்றப்படுகின்றன. நதிகளில் நீராடும்போது சூரிய நமஸ்காரமும் செய்யவேண்டும் என்றும் நதியில் இருந்துகொண்டு சூரிய நமஸ்காரம் பண்ணுவது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்றும் அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். எனவே நதியில் நீராடும் போது சூரியனை நமஸ்காரம் செய்து மனதார வழிபடுங்கள்.

சூரிய பகவானின் காயத்ரியை சொல்லி வணங்கலாம். தினமும் சொல்லி வழிபடலாம். அதேபோல், ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி பாரயணம் செய்யுங்கள். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யச் செய்ய, ஆன்ம பலம் பெருகும். மனோபலம் அதிகரிக்கும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.

கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் கிரக பாதிப்புகள் அனைத்தும் நீங்கி, இறையருளைக் கிடைக்கச் செய்ய ஆதித்ய ஹ்ருதயம் மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் சுபிட்சத்தைக் கொடுக்கும். இல்லறத்தை நல்லறமாக்கும். சுபிட்சத்தையும் ஆன்மிக சிந்தனையையும் வளர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

SCROLL FOR NEXT