ஆன்மிகம்

2021-ன் முதல் சங்கடஹர சதுர்த்தி; சனிக்கிழமையில் ஆனைமுக வழிபாடு! 

செய்திப்பிரிவு

சனிக்கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால், சகல கிரக தோஷமும் விலகும். சங்கடங்கள் அனைத்தும் தீரும். நாளைய தினம் 2ம் தேதி சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி.

ஒவ்வொரு ரூபத்தில் தெய்வங்கள் இருக்கின்றன. பிரபஞ்சத்தையே ஆளுவதற்கு ஒவ்வொரு விதமான சக்தியை வியாபித்து, அந்தந்த தெய்வங்கள் நம்மை நெறிப்படுத்துகின்றன. நமக்கு பக்கபலமாக இருக்கின்றன. நமக்கு அருளும் சக்தியும் வழங்கி, நம்மை காத்தருள்கின்றன.

வாழ்வில், தெய்வ வழிபாடு என்று பொதுவாகச் சொன்னாலும் அந்த தெய்வ வழிபாட்டிலும் இஷ்ட தெய்வ வழிபாடு என்று உண்டு. குலதெய்வ வழிபாடு என்று உண்டு. அந்தந்த பிரார்த்தனைகளுக்காக உரிய தெய்வங்கள் என்றும் அந்த தெய்வ சாந்நித்தியம் ததும்பியிருக்கிற தலங்களும் இருக்கின்றன.

இப்படி எத்தனை திருத்தலங்கள் இருந்தாலும் எவ்வளவு தெய்வங்கள் இருந்தாலும் குலதெய்வத்தை தொடர்ந்து தவறாமல் செய்து கொண்டிருந்தாலும் இஷ்ட தெய்வ வழிபாட்டை ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் விட மிக மிக முக்கியமாக நாம் வழிபடுகிற விநாயகப் பெருமானாகத்தான் இருக்கும். இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரைத்தான் வணங்க வேண்டும். ஆனைமுகத்தானை முதலில் வணங்கிவிட்டுத்தான் அடுத்தடுத்த தெய்வங்களை வணங்க வேண்டும். ஆலயங்களுக்குச் சென்றாலும் அங்கே முதலில் பிள்ளையார் சந்நிதிதான் இருக்கும். அவரை வணங்கிய பிறகுதான் அடுத்தடுத்த மண்டபங்களுக்குள் நுழைந்து, அடுத்தடுத்த சந்நிதிகளில் உள்ள தெய்வங்களை வணங்கி வழிபடவேண்டும்.

அதேபோல், ஹோம பூஜைகள் செய்யும்போது கூட, முதலில் பிள்ளையாரை வணங்கிய பிறகே உரிய தெய்வங்களுக்கான ஹோம, யாகங்களைச் செய்வது வழக்கம் என்கின்றன சாஸ்திரங்கள்.

வரலட்சுமி விரதம், கேதார கெளரி நோன்பு முதலான விரத காலங்களில் கூட, முதலில் கணபதி பெருமானை வணங்கிவிட்டுத்தான், அடுத்த பூஜையை மேற்கொள்ளவேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தீபதூப ஆராதனைகள் காட்டிவிட்டுத்தான் எந்த பூஜையையும் மேற்கொள்வோம்.
அதனால்தான் முதற்கடவுள் பிள்ளையார் என்றும் முழுமுதற்கடவுள் அவரே என்றும் வலியுறுத்துகின்றன ஞானநூல்கள்.

பிள்ளையாருக்கு சதுர்த்தி நாள் ரொம்பவே விசேஷம். ஆவணி மாதத்தில் வருகிற சதுர்த்தி, விநாயக சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியை அடுத்தும் அமாவாசையை அடுத்தும் நான்காம் நாள் சதுர்த்தி வரும். இதில் பெளர்ணமியை அடுத்து வரும் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. வழிபடப்படுகிறது. வணங்கப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி என்பதே விசேஷமான நாள். இந்தநாளில், அருகில் உள்ள கோயிலின் விநாயகர் சந்நிதிக்குச் சென்று அவரை தரிசித்து மனதார வழிபடுவது பலவித நன்மைகளையும் வாரி வழங்கவல்லது. விநாயகப் பெருமானுக்குஅருகம்புல் மாலையும் வெள்ளெருக்கு மாலையும் ரொம்பவே விசேஷமானது. ஆகவே பிள்ளையாருக்கு சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள்.

சனிக்கிழமையன்று வருகிற சங்கடஹர சதுர்த்தி இன்னும் விசேஷம்.நாளைய தினம் 2ம் தேதி சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி. இந்த விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு, நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வர பகவானையும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பிள்ளையாருக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடலாம். கொழுக்கட்டை படைக்கலாம். பாயசம் நைவேத்தியம் செய்யலாம். நம் அல்லல்களையும் சங்கடங்களையும் போக்கி அருளுவார் வேழமுகத்தான்!

2021ம் ஆண்டின் முதல் சங்கடஹர சதுர்த்தி இது!

SCROLL FOR NEXT