சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் தொடங்கி தினமும் சுக்கிர பகவான் காயத்ரியைச் சொல்லி வாருங்கள். இனி சுக்கிர யோகம் அடிக்கப்போகிறது உங்கள் வாழ்க்கையில் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள் இது. சுக்கிர பகவானின் அருளைப் பெற வேண்டுமெனில், மகாலக்ஷ்மியின் கடாட்சம் கிடைக்கவேண்டும். மகாலக்ஷ்மிக்கு உகந்த நாளும் வெள்ளிக்கிழமைதான்.
பொதுவாக, பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் உகந்த நாட்கள் என்று சொல்லப்படுகிறது.
சுக்கிர பகவான் அருளாளர். எவர் மீதும் கோபம் கொள்ளாதவர். அபசகுன வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ளாதவர். அப்படி துர்வார்த்தைகள் பேசுவோரிடமும் பேசுபவரின் இல்லங்களிலும் சுக்கிர பகவான் வரமாட்டார். அமைதியாக திரும்பிச் சென்று விடுவார்.
சுக்கிர பகவானின் மனம் குளிரும்படி அவரின் காயத்ரியைச் சொல்லி வழிபடத் தொடங்கினால், சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வார். எல்லா சுபிட்சங்களையும் கொடுத்துக் காப்பார். இனி சுக்கிரயோகம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம் என்பது உறுதி.
சுக்கிர பகவான் காயத்ரி :
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனுர் அஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். வெள்ளிக்கிழமையில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தை 21 முறை சொல்லி வாருங்கள். பின்னர் தினமும் சுக்கிர பகவான் காயத்ரி சொல்லி வாருங்கள்.
அருகில் உள்ள சிவாலயத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் சென்று நவக்கிரகத்தில் உள்ள சுக்கிர பகவானுக்கு வெண்மை நிற வஸ்திரம் சார்த்தி, வெண்மை நிற மலர்கள் சூட்டி வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தால் வெள்ளிக்கிழமையில் மட்டும் சுக்கிர காயத்ரியை மனதாரச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். சுக்கிர பகவானுக்கு மல்லிகை மலர் சூட்டுவது மிகவும் விசேஷம்.
வெள்ளிக்கிழமை தோறும் நவக்கிரகத்தில் உள்ள சுக்கிர பகவானை தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தரிசித்து வருவது உன்னத பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.