பேரூர் சிவனாரை வணங்கி வழிபடுவது விசேஷம். அதேபோல், வெள்ளிக்கிழமையிலும் செவ்வாய்க்கிழமையிலும் அம்பாளையும் முருகக் கடவுளையும் வணங்கி வழிபடுவது எல்லையற்ற நன்மைகளை வழங்க வல்லது என்கிறார்கள் பக்தர்கள்!
கோவையின் மிக முக்கியமான பகுதியாகத் திகழ்கிறது பேரூர். பிரசித்தி பெற்ற பேரூரில் அற்புதமாக அமைந்திருக்கிறது சிவாலயம். புராண - புராதனப் பெருமைகள் கொண்ட பேரூர் சிவாலயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் ஸ்ரீபட்டீஸ்வரர்.
கலைப்பொக்கிஷமாகத் திகழும் பேரூர் திருத்தலம், சிற்ப நுட்பங்களுடன் காட்சி தருகிறது. சிற்பங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு மண்டபங்களும் தூண்களும் வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.
திருமலை நாயக்க மன்னரின் சகோதரர் அளகாத்ரி நாயக்கர் பேரூர் திருத்தலத்தின் மகிமையை உணர்ந்து, இறைவனின் சாந்நித்தியத்தில் சிலிர்த்து, 36 தூண்களைக் கொண்ட கனகசபையை எழுப்பியுள்ளார் என்கிறது ஸ்தல வரலாறு.
இங்கே, ‘ந’ என்றும் ‘ம’ என்றும் ‘சிவாய’ என்றும் மூன்று பஞ்சாட்சரப் படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மண்டபத்தில்தான் ஆடல்வல்லான் நடராஜ பெருமான் தன் துணைவியார் சிவகாமி அன்னையும் அழகுக் கோலத்துடன் காட்சி தருகின்றனர்.
மண்டபத்தில் 36 கலைகளை உணர்த்துகிற விதமாக 36 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமா? ஒவ்வொரு தூண்களும் ஒவ்வொரு கல்லைக் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தில், சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு மட்டும்தான் பூஜைகள் செய்யப்படுகிறது. வேறு எந்த பூஜையையும் நிகழ்ச்சியையும் இங்கே நடத்தப்படுவதில்லை.
கனகசபை மண்டபத்தில், பஞ்சாட்சரப் படிகளைக் கடந்து சென்றதும் இரண்டு பக்கமும் பிரமாண்டமான எட்டு சிலைகள் பிரமிக்கத்தக்க வகையில் காட்சி தருகின்றன. கல் சங்கிலியும் சுழல் தாமரையும் கண்டு பிரமித்துப் போகிறார்கள் பக்தர்கள்.
இவற்றையெல்லாம் கடந்தது இரண்டாவது பஞ்சாட்சரப் படிகள் உள்ளன. இதனருகே, யாளியின் வாய், யானையின் துதிக்கை இரண்டும் கலந்த, இணைந்த சிலை அற்புதமாகக் காட்சி அளிக்கிறது. அடுத்தும் ஏராளமான சிலைகள் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது பஞ்சாட்சரப் படிகளைக் கடந்தால், ஆனந்தமாக தாண்டவமாடிக்கொண்டிருக்கும் நடராஜரையும் அன்னை சிவகாமியையும் தரிசிக்கலாம். இங்கே உள்ள மண்டபத்தில் நான்கு தூண்கள்; நான்கு வேதங்களே நான்கு தூண்களாக அமைந்திருக்கின்றன. நடராஜரின் கனகசபை மண்டபம், 94 அடி நீளம் கொண்டவை. 38 அடி அகலம் கொண்டவை. மண்டபத்தின் 36 தூண்களும் பதினாறு உயரத்துடன் அமைந்திருக்கின்றன.
கோவையின் பேரூர் பட்டீஸ்வரம் திருத்தலம் புராணத் தொடர்பு கொண்டவை. காமதேனு, பட்டி முதலான பசுக்கள் வழிபட்ட திருத்தலம். முனிவர் பெருமக்களும் ஞானிகளும் மன்னர்களும் வழிபட்ட திருத்தலம்.
சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் பேரூர் சிவனாரை வணங்கி வழிபடுவது விசேஷம். அதேபோல், வெள்ளிக்கிழமையிலும் செவ்வாய்க்கிழமையிலும் அம்பாளையும் முருகக் கடவுளையும் வணங்கி வழிபடுவது எல்லையற்ற நன்மைகளை வழங்க வல்லது என்கிறார்கள் பக்தர்கள்!