ஆன்மிகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: விருச்சிக ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை)

ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

விருச்சிக ராசி வாசகர்களே

விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதப் போக்கும் கொண்ட நீங்கள், நாலும் அறிந்தவர்கள். தன்மானம் அதிகமுள்ள நீங்கள் தயவு, தாட்சண்யம் அதிகம் பார்ப்பவர்கள். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்து பேச்சால் பல பிரச்சினைகளில் சிக்கவைத்து உங்களைக் கேலிப்பொருளாக்கிய சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்களை விட்டு விலகி மூன்றாம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும்.

முதல் முயற்சியிலேயே எல்லாக் காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்துக் கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்கியம் அடைவீர்கள். கூச்சல், குழப்பமாக இருந்த குடும்பத்தில் இனி கொண்டாட்டம்தான்.

வயது ஏறிக் கொண்டே போகிறதே! ஒரு வரன் கூட அமையவில்லையே என்று வளர்ந்து நிற்கும் உங்கள் பெண்ணை பார்த்து நீங்கள் வருத்தப்படாத நாளே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும் படி திருமணத்தை முடிப்பீர்கள். குழந்தைப்பேறு கிட்டும். அழகிய வாரிசு உருவாகும். அடிக்கடி இனி வீடு மாற்றத் தேவையில்லை. கையில், கழுத்தில் இருந்ததைப் போட்டு கடனை வாங்கி சொந்த வீட்டில் குடிபுகுவீர்கள். சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்வதால் இக்காலகட்டத்தில் வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், பணப்பற்றாக்குறை வந்து நீங்கும்.

சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்விக வீட்டை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள். சனிபகவான் உங்களின் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்கிய மான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான், உங்களுடைய 12-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

சனிபகவானின் நட்சத்திர பலன்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் எதிலும் வெற்றியுண்டு. சமயோஜிதப் புத்தியால் சாதிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடியும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அதிகம் உழைக்க வேண்டி வரும். திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டு. பொன், பொருள் சேரும். பிதுர்வழிச் சொத்துகள் வந்து சேரும்.

வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்க ளுக்குச் சென்று வருவீர்கள். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் வீண்செலவுகள், காரியத்தடை கள் வந்து நீங்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வ தால் அழகு, அறிவு கூடும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை உள்ள காலத்தில் சனிபகவான் வக்கிரமடைவதால் திடீர்ப் பயணங்கள், படபடப்பு, பாகப் பிரிவினையால் பிரச்சினைகள் வந்துச் செல்லும். சகோதரர்களுடன் மனத்தாங்கல் வரும்.

பல ஆண்டுகள் வியாபாரத்தில் இருந்தும் லாபத்தை பார்க்க முடியவில்லையே என்று நீங்கள் புலம்பி தவிர்த்தீர்களே! இனி கடையை நவீனமாக்கி லாபத்தைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டுத் தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பிரச்சினை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைபட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிகச் சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். இந்தச் சனி மாற்றம் விரக்தியின் விளிம்பில் இருக்கும் உங்களை வெற்றிக்கனியைப் பறிக்க வைப்பதுடன் பகட்டான வாழ்க்கையையும் அமைத்துத் தரும்.

பரிகாரம்

தேனீக்கு அருகில் குச்சனூரில் வீற்றிருக்கும் சுயம்பு சனீஸ்வர பகவானை விசாகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழையின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

SCROLL FOR NEXT