ஆன்மிகம்

சுக்கிர வாரத்தில் வைகுண்ட ஏகாதசி;  மகாலக்ஷ்மியை வணங்கினால் சுக்கிர யோகம்! 

வி. ராம்ஜி

சுக்கிரவாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில், வைகுண்ட ஏகாதசியும் இணைந்திருக்கும் நன்னாளில், மகாலக்ஷ்மியை வீட்டில் வணங்குவதும் கோயிலுக்குச் சென்று அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டால் சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மார்கழி மாதம் என்பது மகத்தான மாதம். மார்கழி என்பது வழிபாட்டுக்கான மாதம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என மகாபாரதத்தில், கிருஷ்ணாவதாரத்தில் பகவான் மகாவிஷ்ணு அருளியுள்ளார். ஆகவே, மார்கழி மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை, பெருமாளை, மாலவனை, திருமாலை, வேங்கடவனை வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாட்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அப்படியிருக்க, இன்னும் வளமும் நலமும் தருகிற நாளாக அமைந்திருப்பதுதான் வைகுண்ட ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகள் இருந்தாலும் அந்த ஏகாதசியும் விரதத்துக்கும் வழிபாட்டுக்கும் உகந்தவை என்றாலும் மார்கழி வளர்பிறை ஏகாதசியைத்தான் வைகுண்ட ஏகாதசி என்று போற்றுகிறது புராணம். அந்த நாளில் அவசியம் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யவேண்டும் என்பதும் அதனால் வேங்கடவனின் பேரருளைப் பெறலாம் என்பதும் ஐதீகம்.

அதேபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உகந்த நாள். தேவிக்கு உரிய நாள். சக்தியை வழிபடுவதற்கான நன்னாள். மகாலக்ஷ்மியை ஆராதிக்க வேண்டிய நாள்.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்றும் சொல்லுவார்கள். சுக்கிர யோகம் கூடிய நாள் என்பார்கள். சுக்கிர பகவானுக்கு அருளுபவளும் ஆட்சி செய்பவளும் மகாலக்ஷ்மி தாயார். எனவே, வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மியை வழிபட்டு ஆராதித்தால், மனதாரப் பிரார்த்தனைகள் செய்தால், இல்லத்தில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும் என சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

நாளைய தினம் 25ம் தேதி வெள்ளிக்கிழமை. மார்கழி மாதத்தின் வெள்ளிக்கிழமை. மார்கழி மாதத்தின் வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை. மேலும் மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி நன்னாள். இதுவே வைகுண்ட ஏகாதசி நாள். சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவும் வெள்ளிக்கிழமையும் இணைந்த அற்புத நாளில், மகாலக்ஷ்மித் தாயாரை வழிபடுவோம். அஷ்டோத்திரம் சொல்லி வழிபடுவோம். முடிந்தால், தாமரை மலர்களும் வெண்மை நிற மலர்களும் சமர்ப்பித்து வழிபடுவோம். மனதார வேண்டிக்கொள்வோம். இல்லத்தில் விளக்கேற்றி லக்ஷ்மி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் முதலானவற்றை பாராயணம் செய்யுங்கள். அல்லது ஒலிக்க விட்டுக் கேளுங்கள்.

மங்கல காரியங்கள் இனிதே நடைபெறும். மங்காத செல்வங்களைத் தந்தருள்வாள். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

SCROLL FOR NEXT