ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் ; இம்மையில் வளம்; மறுமையில் மோட்சம்! 

வி. ராம்ஜி

வருகிற 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி. இந்தநாளில், வைகுண்ட வாசனை, பிரசன்ன வேங்கடேசனை, ஏழுமலையானை, அரங்கனை மனம் குவித்து வேண்டிக்கொள்ளுங்கள். இம்மையில் எல்லா வளங்களும் பெறலாம். மறுமையில் முக்தியும் மோட்சமும் அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படும் திருத்தலம் ஸ்ரீரங்கம். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள அற்புத க்ஷேத்திரம்.

வருடம் 365 நாளில், பெரும்பாலான நாட்கள் இங்கே திருவிழாக்கள் களைகட்டும். மார்கழியின் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா என்பது மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் திருவிழா. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாள் பகல் பத்து என்று அழைக்கப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்து வரக்கூடிய பத்து நாட்களும் ராப்பத்து என்று அழைக்கப்படும். ஆக வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவானது 21 நாட்கள் நடைபெறும் என்று ஸ்ரீரங்கம் திருத்தலத்தின் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தசமியில் ஒரு பொழுது மட்டும் உணவு, ஏகாதசி நாளில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு தரிசனம். மறுநாள்... துவாதசியில் விரதம் பூர்த்தி. இதுவே வைகுண்ட ஏகாதசி விரதத்தின் தாத்பர்யம்.

மதுகைடபர்கள் என்கிற அரக்கர்கள், செய்யாத அட்டூழியமில்லை. முனிவர்களும் தேவர்களும் மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர்களை போரிட்டு அழித்தார். அப்போது இறக்கும் தருணத்தில், அவர்களுக்கு வைகுண்ட மோட்சம் தந்தருளினார் பெருமாள்.

வைகுண்ட சொர்க்கத்தை எங்களைப் போல் எல்லோரும் பெற வேண்டும் என்று மதுகைடபர்கள் பெருமாளிடம் வேண்டுகோள் விடுத்தனர். வைகுண்ட ஏகாதசி நன்னாளில், வடக்கு வாசல் வழியே அர்ச்சாரூபமாக தாங்கள் வந்து அருளும் போது, தங்களை எவரெல்லாம் தரிசிக்கிறார்களோ, பின்னர் உங்களின் பின்னே எவரெல்லாம் வருகிறார்களோ அவர்களுக்கு மோட்சம் அளித்து அருளவேண்டும். அவர்களில் எங்களைப் போல் அரக்கர்களாகவோ கொடியவர்களாகவோ துர்குணங்கள் கொண்டவராகவோ எவராக இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளித்து மோட்ச கதியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று ‘அப்படியே ஆகட்டும்’ என்றார்.

இதையொட்டியே, மார்கழியின் வளர்பிறை ஏகாதசி நன்னாள், வைகுண்ட ஏகாதசி என்றும் அன்றைய நாளில், பெருமாள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு திருக்காட்சி தரும் நிகழ்வும் நடைபெறுகின்றன.

வைகுண்ட ஏகாதசி என்பது ஒரு வருடத்தில் வரக்கூடிய முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. மிக மிக முக்கியமான விரதங்களில் முக்கியமானது. அதனால்தான், காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை, தாயாருக்குச் சமமான தெய்வம் இல்லை, காசி கங்கைக்கு நிகரான தீர்த்தமில்லை, ஏகாதசிக்கு நிகரான விரதமில்லை என்று சொல்லி வைத்தார்கள்.

வருகிற 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி. இந்தநாளில், வைகுண்ட வாசனை, பிரசன்ன வேங்கடேசனை, ஏழுமலையானை, அரங்கனை மனம் குவித்து வேண்டிக்கொள்ளுங்கள். இம்மையில் எல்லா வளங்களும் பெறலாம். மறுமையில் முக்தியும் மோட்சமும் அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

SCROLL FOR NEXT