ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்; போர்வை தானம் வழங்குங்கள்! 

வி. ராம்ஜி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விரதமிருத்தல், இறை தரிசனம், அன்னதானம், போர்வை தானம் என எது செய்தாலும் மகா புண்ணியம். மோட்சத்தை அடையலாம் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மார்கழிக்கு மிஞ்சிய மாதமும் இல்லை. ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்றொரு சொற்றொடர் உண்டு. மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொண்டு பெருமாளை ஸேவித்தால், வைகுண்ட மோட்சம் நிச்சயம் என்கிறது புராணம்.

வைகுண்ட ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்வது இப்படித்தான்!

ஏகாதசிக்கு முதல் நாள் தசமி. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், தசமியில் இருந்தே விரதத்தை மேற்கொள்ள வேண்டும். தசமியில், பகலில் ஒருவேளை மட்டும் உணவெடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏகாதசி. வைகுண்ட ஏகாதசி. இந்தநாளில், அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு, பூஜைகள் மேற்கொண்டு, வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்ளவேண்டும். ஏகாதசி முடியும் வரை உண்ணாமல் விரதம் மேற்கொள்வது சிறப்பு. முடியாதவர்கள், பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீர் அருந்தலாம். கஞ்சி போல் வைத்துக் குடிக்கலாம்.
மார்கழி மாதம் என்பது குளிர்மாதம். இந்தக் குளிர்மாதத்தில் சூடு கிடைப்பது இதமாக இருக்கும். சமன் செய்யும். துளசிக்கு வெப்பத்தன்மை உண்டு. வைகுண்ட ஏகாதசி நாளில், ஏழு முறை ஒன்பது முறை என துளசியை சாப்பிடுவது நல்லது.

இரவு முழுக்க கண்விழிப்பது என்பது மிக மிக விசேஷமானது. அதற்காக இரவு முழுவதும் சினிமா பார்த்துக் கொண்டிருப்பது விளையாடிக் கொண்டிருப்பது என்பதெல்லாம் கூடாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். புராண நூல்களைப் படிக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ர நாமம், கனகதாரா ஸ்தோத்திரம் முதலானவற்றை ஒலிக்க விட்டுக் கேட்கலாம். உபந்யாசங்கள் கேட்கலாம்.

தசமிக்கு மறுநாள் ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. மறுநாள் துவாதசி. காலையில் நீராடிவிட்டு , பூஜைகள் மேற்கொண்டு உணவு எடுத்துக் கொள்ளலாம். இதனை பாரணை என்று சொல்லுவார்கள். கோவிந்தா கோவிந்தா என மூன்று முறை சொல்லி உணவெடுத்துக்கொள்ளுங்கள்.

உணவில் நெல்லி, சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்ப்பது உத்தமம். முடிந்தால், அன்றைய நாளில் எவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம். தெருவோரத்தில் வசிப்பவர்களுக்கு போர்வை தானம் வழங்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விரதமிருத்தல், இறை தரிசனம், அன்னதானம், போர்வை தானம் என எது செய்தாலும் மகா புண்ணியம். மோட்சத்தை அடையலாம் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

SCROLL FOR NEXT