ஆன்மிகம்

மார்கழி குருவாரத்தில் குரு தரிசனம்!  குரு யோகம் கிடைக்கும்; குருவருள் நிச்சயம்! 

வி. ராம்ஜி

மார்கழி மாதத்தின் குரு வாரத்தில் குரு பகவானை தரிசியுங்கள். குரு யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். குருவருள் கிடைத்து வாழ்வில் உயருவீர்கள்.
மார்கழி மாதம் என்பது புரட்டாசி மாதத்தைப் போலவே வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் என்பது புண்ணியம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் கலை, கல்வி முதலான எந்த விஷயங்களை மேற்கொண்டாலும் விரைவில் அவற்றை கிரகித்துக் கொள்ளும் திறன் உண்டாகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அதேபோல், புதிதாக மந்திரங்கள் கற்றுக் கொள்வதற்கும் யோகா முதலான பிராணாயாமப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் உகந்த மாதம் இது என்று சொல்கிறார்கள்.
குருவின் துணையின்றி ஓர் அணுவும் அசையாது என்கிறது சாஸ்திரம். குருவின் அருளில்லாமல் ஏதுமில்லை. குருவின் பார்வை பட்டால்தான் வாழ்வில் மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும் என்பது ஐதீகம்.

குருவின் அருளில்லாமல் இருந்ததால்தான், உமையவள் சிவபெருமானை திருமணம் செய்யும் ஆசை தள்ளிக்கொண்டே போனது என்றும் இதனால் கடும் தவம் மேற்கொண்டதன் பலனாக குருவருள் கிடைக்கப் பெற்றார் என்றும் குருவருளும் குரு யோகமும் கிடைக்கப் பெற்றதால், பரமேஸ்வரன் பார்வதிதேவியை மணம் புரிந்தார் என்றும் விவரிக்கிறது புராணம்.

மார்கழி மாத வழிபாட்டிலும் பூஜைகளிலும் ஜபதபங்களிலும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக குரு தரிசனம் சொல்லப்படுகிறது. குருவை வணங்கிவிட்டுச் செய்யும் காரியங்கள் யாவும் குரு யோகத்தைத் தந்து நம்மையும் நம் வாழ்க்கையையும் செம்மையாக்கித் தரும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.

நாளைய தினம் வியாழக்கிழமை. வியாழக்கிழமையை குரு வாரம் என்பார்கள். இந்த குருவாரத்தில், வியாழக்கிழமையில் குரு தட்சிணாமூர்த்தி பகவானை வேண்டிக் கொள்ளுங்கள். ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி மூல மந்திரத்தைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள்.

எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிக்கலாம். வெண்மை நிற மலர்கள் சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளலாம்.

அதேபோல, நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானை தரிசியுங்கள். நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவான், தேவ குரு. இவர் பிரகஸ்பதி எனப்படுகிறார். குரு பகவானை தரிசித்து நவக்கிரகத்தை ஒன்பது முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொள்ளுங்கள். குரு யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். ராஜயோகத்தை அள்ளித்தருவார் நவக்கிரக குரு பகவான்.

இதேபோல், பிரம்மாவை வணங்குவதும் பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே மகத்தானது. திருப்பட்டூர் பிரம்மாவை மனதார நினைத்து, பிரம்மாவின் மூல மந்திரம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

வியாழக்கிழமைதோறும் குரு பகவானை மனதார வேண்டுங்கள். இந்த மார்கழி வியாழனில் மறக்காமல் பிரார்த்தனை செய்யுங்கள். குரு மங்கல யோகம் உங்களைத் தேடி வரும்.

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குருவருள் இருந்தால் திருவருள் நிச்சயம் என்பார்கள். குருவின் பார்வை படும்படி ஆலயம் சென்று தரிசியுங்கள். குருவருளும் திருவருளும் கிடைத்து சந்ததி சிறக்க செம்மையாய் வாழ்வீர்கள்.

SCROLL FOR NEXT