ஆன்மிகம்

திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு ஆராதனை; வீட்டில் இருந்தே நேரலையில் தரிசிக்க ஏற்பாடு! 

செய்திப்பிரிவு

சென்னை திருவொற்றியூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு, சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடுகளும் நவக்கிரக ஹோமங்களும் நடைபெறுகின்றன. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த வழிபாட்டையும் பூஜையையும் வீட்டில் இருந்தே தரிசிக்கலாம். இந்த ஆராதனை வழிபாடுகளை இணையதள சேனலில் நேரலையில் ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில் உள்ள முக்கியமான தலங்களில் திருவொற்றியூர் திருத்தலமும் ஒன்று. திருவொற்றியூரில் அமைந்துள்ளது ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம். சனிப்பெயர்ச்சியையொட்டி இந்தக் கோயிலில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமங்களும் அபிஷேக ஆராதனைகளும் 27ம் தேதி நடைபெறுகின்றன.

வரும் 27ம் தேதி சனீஸ்வர பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதை முன்னிட்டு, 27ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது சிறப்பு பூஜை. ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பரிகாரஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. 27.12.2020 ஞாயிறு அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, அனுக்ஞை, சங்கல்பம், கணபதிஹோமம், நவகிரகஹோமம், திலஹோமம் நடைபெறுகிறது.

காலை 5.22 மணிக்கு சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகரராசிக்கு பிரவேசிக்கும் நேரம் பூர்ணாஹூதியுடன் ஹோமம் நிறைவு பெறும். இதன் பின்னர் அருள்மிகு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.

சிறப்பு பரிகார ஹோமம், பூர்ணாஹூதி,அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளை பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial… 27ம் தேதி காலை 4 மணி முதல் இந்த இணையதளத்தின் வழியே வழிபாடுகளை நேரலையில் தரிசிக்கலாம். வீட்டில் இருந்தே சனீஸ்வர பகவான் தரிசனத்தை நேரலையில் கண்டு சனி பகவானின் அருளைப் பெறலாம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT