ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்; கம்பராமாயண  ஸ்ரீரங்கம்

வி. ராம்ஜி

வைகுண்ட ஏகாதசிக்கு பேர்பெற்ற திருத்தலம் ஸ்ரீரங்கம். 108 வைணவத் தலங்களில் முதன்மையான திருத்தலம் என்று போற்றப்படுகிறது இந்தத் திருத்தலம்.
பிரம்மா, மகாவிஷ்ணுவை நோக்கி பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்தார். அப்படி தவமிருந்து பாற்கடலில் இருந்து பெறப்பட்டது ஸ்ரீரங்க விமானம். நான்கு வேதங்களையும் இந்த விமானத்தின் முன்னே ஓதியருளினார். ஸ்ரீரங்க விமானத்தில், அர்ச்சாரூபமாக, முழு வடிவமாக அவதரித்த ரங்கநாதரை, இக்ஷ்வாகு மன்னர் தங்களின் குலதெய்வமாகவே அயோத்தியில் வைத்து பூஜித்து வந்தார். அந்த இக்ஷ்வாகு வம்சத்தின் வழியே வந்தவர்தான் ராமபிரான்.

சீதையை மீட்டெடுக்க உதவிபுரிந்த விபீஷணனுக்கு ரங்கநாதரின் விக்கிரகத்தை பரிசாக வழங்கினார் ராமபிரான். விபீஷணன், அதை அயோத்தியில் இருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில், தர்மவர்மா எனும் சோழ தேசத்து அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க, ரங்க மூர்த்தத்தை காவிரிக்கரையில் தன் தேசமான இலங்கையை நோக்கிய முகமாக பிரதிஷ்டை செய்து சென்றார் என ஸ்ரீரங்க மகாத்மியம் விவரிக்கிறது.

பங்குனி மாதத்தின் வளர்பிறை சப்தமி திதியில், ஒரு சனிக்கிழமை நன்னாளில், சந்திரன் ரோகிணியில், குரு ரேவதியில் இருக்கும் போது, ரங்கன் திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்தார் என்கிறது ஸ்தல புராணம்.

ஆக ராமாயணத்திற்கும் ஸ்ரீராமபிரானுக்கும் விபீஷணனுக்கும் தொடர்பு கொண்டவராக திகழ்கிறார் ஸ்ரீரங்கநாயகன்.

கம்ப ராமாயணத்தை கம்பர் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் செய்தார். அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர்.

ஆனால் கம்பர், “அதை நரசிம்மரே சொல்லட்டும்!’ எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, “கம்பரின் கூற்று உண்மை!’ என ஆமோதித்து தலையசைத்தார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சந்நிதி அருகில் தனிசந்நிதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, சக்கரம் கிடையாது. எதிரில், கம்பராமாயணத்தை அரங்கேற்றிய மண்டபம் காட்சியாகவும் சாட்சியாகவும் உள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலின், ஒவ்வொரு இடமும் ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்தவை.

மார்கழி மாதத்தில் அரங்கனை தரிசியுங்கள். நம்மையும் நம் வாழ்க்கையையும் குளிரப்பண்ணுவான் ரங்கநாதன்.

SCROLL FOR NEXT