கோயில் என்றாலே சைவத்தில் குறிப்பிடுவது சிதம்பரம் நடராஜர் கோயிலைத்தான் என்பார்கள் பக்தர்கள். அதேபோல் வைஷ்ணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீரங்கம் கோயிலைக் குறிக்கும் என்பார்கள். அப்படி சைவத்தில் சிதம்பரமும் வைணவத்தில் ஸ்ரீரங்கமும் திகழ்கிறது. அப்பேர்ப்பட்ட ஸ்ரீரங்கம் திருத்தலம், வைகுண்ட ஏகாதசிக்கும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வைபவமும் பிரசித்தம்.
காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள திருத்தலம் ஸ்ரீரங்கம். நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக மிக அழகான மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சந்நிதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில் என பிரமாண்டமாக அமைந்திருக்கிறது ஸ்ரீரங்கம் க்ஷேத்திரம். இதில் நான்காம் பிராகாரம் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது.
இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மொத்தம் மூன்று பிரம்மோத்ஸவங்கள் நடைபெறுகின்றன. தை மாதத்தில் ஒரு பிரம்மோத்ஸவம் நடைபெறும். அடுத்து மாசி மாதத்தில் பிரம்மோத்ஸவமும் சித்திரை மாதத்தில் பிரம்மோத்ஸவமும் நடைபெறும்.
புராணப்படி இந்தக் கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. சுயம்பு க்ஷேத்திரம் என்றே விவரிக்கிறது புராணம். சயனத் திருக்கோலத்தில் மூலவர் ரங்கநாதப் பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது பெருமைக்கு உரிய ஒன்று என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
’ரங்கனை ஸேவிச்சா புண்ணியம் நிச்சயம்’ என்றொரு வாசகம் உண்டு. அதேபோல், ‘எங்கே சுத்தியும் ரங்கனைத்தான் ஸேவிக்கணும்’ என்று சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.
அத்தனை பெருமை மிகுந்த ஸ்ரீரங்கம் திருத்தலத்தில், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவும் சொர்க்கவாசல் திறப்பும் விமரிசையாக நடந்தேறும்.
வருகிற 25ம் தேதி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி. இந்த நன்னாளில், ரங்கனை நினைத்தாலே புண்ணியம். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளை கண்ணாரத் தரிசித்து, மனதார வேண்டிக்கொள்வோம். மங்கல காரியங்களை இல்லத்தில் நடத்தித் தந்தருள்வார் வேங்கடவன்!