ஏகாதசி என்றாலே மார்கழி மாதம் நினைவுக்கு வரும். மார்கழி என்றாலே வைகுண்ட ஏகாதசி நினைவுக்கு வரும். வைகுண்ட ஏகாதசி என்றதும் பரமபத வாசல் நினைவுக்கு வரும். வருகிற 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி.
மாதந்தோறும் இரண்டு ஏகாதசி திதி வரும். ஒன்று வளர்பிறை ஏகாதசி. இன்னொன்று தேய்பிறை ஏகாதசி. மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வருகிற ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது.
மாதந்தோறும் ஏகாதசியில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. இவர்கள் வைகுண்ட ஏகாதசி நாளில், அவசியம் விரதம் மேற்கொள்வார்கள். அதேசமயம், மாதாமாதம் ஏகாதசி விரதம் இல்லாவிட்டால் கூட, வைகுண்ட ஏகாதசியின் பொருட்ட்டு விரதம் மேற்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள், ஏகாதசிக்கு முதல்நாளான தசமி திதியில் இருந்தே விரதம் மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். அன்றைய தினம் மதியம் மட்டுமே சாப்பிடுவார்கள். முதல்நாளான காலையும் இரவும் சாப்பிடமாட்டார்கள். உடல்நலம் குன்றியிருப்பவர்கள், வயதானவர்கள், சிறுவர் சிறுமிகள் விதிவிலக்காக மதியம் மட்டுமின்றி மற்ற இரண்டு வேளையும் எளிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பெருமாள் வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிப்பது துளசி. ஏகாதசி நாளில், எக்காரணத்தைக் கொண்டும் துளசியைப் பறிக்கக் கூடாது. அந்த நாளில் பறித்தால், நம்மைப் பாவங்கள் சேரும் என்பது ஐதீகம். ஆகவே, முதல்நாளே துளசி வாங்கி வைத்துக்கொள்வதோ பறித்துக் கொள்வதோ செய்துகொள்ள வேண்டும் என்கிறார் அம்பி பட்டாச்சார்யர்.
ஏகாதசி நன்னாளில் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். வழிபடலாம். இயலாதவர்கள், வீட்டிலேயே பூஜையறையில், மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் திருப்பாவை, திருப்பல்லாண்டு பாராயணம் செய்வதும் மிகுந்த புண்ணியத்தையும் எண்ணற்ற பலன்களையும் தந்தருளும்!
ஏகாதசி நாளில், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் உத்ஸவங்களும் நடைபெறும். அப்போது பெருமாளை தரிசிப்பது நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளக்கூடியது.
ஏகாதசியில்... அன்றைய இரவுப் பொழுதில் தூங்காமல் விழித்திருக்கவேண்டும். நாராயண மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
தசமிக்கு மறுநாள் ஏகாதசி. ஏகாதசிக்கு அடுத்தநாள் துவாதசி. ஏகாதசியில் விரதமிருந்து துவாதசியில் விரதத்தை நிறைவு செய்வார்கள். அன்றைய நாளில், காலையில் நீராடி, பெருமாளை வணங்கி, பெருமாளுக்கு நைவேத்தியங்கள் படைத்து நமஸ்கரித்த பின்னரே உணவு அருந்துவார்கள்.
அந்தக் காலத்திலெல்லாம், உப்பு புளியை அன்றைய நாளில்... வைகுண்ட ஏகாதசி விரத நாளில்... உணவில் சேர்க்கமாட்டார்கள். ஆலிலையில் உணவிட்டுச் சாப்பிடுகிற வழக்கம் இருந்தது. துவாதசி உணவில், நெல்லிக்கனி, சுண்டைக்காய், முக்கியமாக அகத்திக்கீரை சேர்த்துக்கொள்வார்கள். அவற்றை உட்கொள்ளும் போது, ‘கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...’ என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டு, சாப்பிடவேண்டும். அத்துடன் விரதம் நிறைவுறுகிறது.
வைகுண்ட ஏகாதசி நன்னாளில், வைகுண்டவாசனைத் தொழுவோம். அரங்கனை மனதாரப் பிரார்த்திப்போம்!
25.12.2020 வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி.