ஆன்மிகம்

ஓஷோ சொன்ன கதை: சத்தியம் அறியப் பகலில் வாருங்கள்

சங்கர்

எருசலேமைச் சேர்ந்த ஒரு பேரறிஞர் கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க விரும்பினார். அந்தப் பேரறிஞரின் பெயர் நிகோடிமஸ். அவர் யூத உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபலமான, செல்வாக்கும், செல்வமும் நிறைந்த அறிஞர்.

தனது பிரபலப் பின்னணி மற்றும் வயது காரணமாக ஏசுவைப் பகலில் சென்று சந்திக்க அவரது மனம் ஒப்பவில்லை. ஒரு பேரறிஞர் போய் ஏசுவைச் சந்தித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? என்று கருதி இரவில் சந்திக்கப் போனார். அவரைப் பார்த்தவுடன் வரவேற்ற ஏசு, பகலில் வராதது குறித்து கேலியாகக் கேட்டார்.

நிகோடிமஸோ, தான் கூச்சப்பட்டதை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

ஏசு கலகலவென்று சிரித்தபடி, “எதற்காக இங்கே வந்தீர்கள்? என்னிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“கடவுளைப் பற்றி நான் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? சத்தியத்தை நான் எப்படி அறிந்துகொள்வது?” என்றார் பேரறிஞர்.

“அதற்கு நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று சொன்னார் ஏசு கிறிஸ்து.

நிகோடிமசுக்கு ஒன்றும் புரியவில்லை. “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் மீண்டும் ஒரு பெண்ணின் கருப்பைக்குள் நுழைந்து கருவாக வளர்ந்து மீண்டும் பிறக்க வேண்டுமா?” என்றார் கிண்டலாக.

“இல்லை. அப்படிச் சொல்லவில்லை. நீங்கள் வாழ்வது வாழ்க்கையே அல்ல. உங்களுக்கு மறுபடி பிறப்பதற்கான தைரியமே இல்லை. மறுபடி பிறக்கும் புதிய மனிதனால்தான் சத்தியத்தை உணர முடியும். என்னை வந்து சந்திப்பதற்குக்கூட உங்களால் இரவில் தான் வர முடிகிறது. நீங்கள் எப்படி சத்தியத்தை எதிர்கொள்ளப் போகிறீர்கள். கடவுளை எப்படிக் காணப்போகிறீர்கள். கடவுளைப் பார்க்க வேண்டுமானால் உங்களை முழுவதும் களைந்து செல்ல வேண்டும். ஆழ்ந்த பணிவுடன் போக வேண்டும். உங்களது கௌரவம், அறிவு எல்லாவற்றையும் உதறிவிட்டுச் செல்ல வேண்டும். அகந்தையோ துளிகூட இருத்தல் கூடாது. அங்கேதான் மறுபிறப்பு நிகழ்கிறது.”

ஒரு மனிதனுக்கு முதல் பிறப்பு என்பது உடல் ரீதியான பிறப்பு மட்டுமே. அது தேவைதான். ஆனால் அது மட்டுமே போதாது. முதல் பிறப்பு தாயாலும் தந்தையாலும் நிகழ்கிறது. இரண்டாம் பிறப்போ மனதிற்கு வெளியே நிகழ்கிறது. உங்கள் அறிவு, மனம் இரண்டிலிருந்தும் விலகி விழும்போதுதான் மறுபிறப்பு நிகழும்.

அப்போதுதான், மரங்கள் நீங்கள் ஏற்கனவே பார்த்ததைவிடப் பசுமையாக இருப்பதைப் பார்ப்பீர்கள். மலர்களை அதன் அசலான அழகோடு தரிசிப்பீர்கள். இதுவரை உங்களுக்குத் தெரியவந்ததைவிட, வாழ்க்கை உயிர்ப்புடன் தெரியும். நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ அந்த அளவு அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில் வாழ்க்கையை அறியவே முடியாது. லாசரசுக்கு இப்படித்தான் மறு உயிர்ப்பைக் கொடுத்தார் இயேசு.

SCROLL FOR NEXT