வளர்பிறை சதுர்த்தியில் பிள்ளையாரை வழிபடுவோம். பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் விநாயகப் பெருமான். இன்று 18ம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தி. இந்த நன்னாளில், விநாயகப்பெருமானை தரிசியுங்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுங்கள்.
ஒவ்வொரு மாதமும் வருகிற சதுர்த்தி பிள்ளையாருக்கு ரொம்பவே விசேஷம். ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விநாயக சதுர்த்தி என்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல், மாதந்தோறும் வருகிற சதுர்த்தி திதியும் பிள்ளையாருக்கு உகந்த நாட்கள்.
திருவாதிரை என்பது சிவபெருமானுக்கு உகந்தநாளாக வழிபடப்படுகிறது. திருவோண நட்சத்திர நாள் பெருமாளுக்கு உரிய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. பூரம் ஆண்டாளுக்கு உரிய நாளாக விசேஷமாக பூஜிக்கப்படுகிறது.
கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவார்கள் பக்தர்கள். சஷ்டி திதியானதும் கந்தனுக்கு உரிய நாள்தான்.
மூலம் நட்சத்திர நாள், அனுமனுக்கு உகந்த நன்னாளாக, வழிபாட்டுக்கு உரிய நாளாக போற்றப்படுகிறது.
அதேபோல, சதுர்த்தி திதி என்பது விநாயகப் பெருமானுக்கு உகந்தநாள். இந்த நாளில், விரதமிருந்தும் பிள்ளையாரை வணங்கி வழிபடலாம். பிள்ளையாருக்கு உகந்த அருகம்புல் மாலையோ வெள்ளெருக்கு மாலையோ சார்த்தி அவரை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று 18ம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்தி. இந்த நன்னாளில், விநாயகப்பெருமானை தரிசியுங்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுங்கள்.
பிள்ளையார் பெருமானுக்கு சுண்டல் அல்லது பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். நம் விக்னங்களையெல்லாம் தீர்த்து வைத்து அருளுவார் விக்னேஸ்வரர்.