ஆன்மிகம்

விவிலிய வழிகாட்டி: தந்தை நமக்குத் தர விரும்புவது என்ன?

அனிதா அசிசி

இறைமகன் இயேசு சொல்லித் தந்த வாழ்க்கை முறையில் முக்கியமான பகுதியாகப் பார்க்கப்படுவது ‘இறைவேண்டல்’. இதை விவிலிய மொழியில் ஜெபம், மன்றாட்டு என அழைக்கிறோம். இன்று நம் தனிப்பட்ட தேவைகளைக் கூறி ஜெபம் செய்வது அல்லது மன்றாட்டு கூறுவதை கிறிஸ்தவ வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் நாம் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் இயேசு பரலோகத் தந்தையிடம் எவ்வாறு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதையும் இறைவேண்டலில் நாம் கேட்க வேண்டியது என்ன? தந்தை நமக்கு தர விரும்புவது என்ன எனும் மறைபொருளை அவர் நமக்கு எளிமையான போதனையின் மூலம் எடுத்துக்காட்டினார். இறைவேண்டல் குறித்த அவரது வார்த்தைகளில் மிக முக்கியமானதாக விவிலிய ஆராய்ச்சியாளர்களால் பார்க்கப்படும் வசனம் லூக்கா புத்தகம் 11 அத்தியாயம் 9 வசனமாக இருக்கிறது.

மதம், இனம் கடந்து இந்த வசனங்கள் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் சொற்களாக மாறிவிட்டன. அந்த வசனங்களைப் பாருங்கள்.

“ கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்'' . இந்த வசனத்தின் முன்னும் பின்னும் இயேசுவின் போதனையாக இருக்கும் முழுமையான வசனங்களைப் பயில்வதன் மூலம் இயேசு எடுத்துக்காட்டும் இறைவேண்டல் புறவாழ்வுடன் முடிந்துவிடுவதல்ல என்பதை உணர முடியும். எனவே லூக்கா எழுதிய நற்செய்தி அதிகாரம் 11-ல் வசனங்கள் 5 முதல் 13 முடிய வாசிக்கலாமா?

தூய ஆவி எனும் கொடை

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தபோது “உங்களில் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, `நண்பா, மூன்று அப்பங் களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். உள்ளே இருப்பவர், `எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்துறங்குகிறார்கள்.

நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் பரலோகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!''(லூக்கா: 11:5-13).

இதயக்கதவைத் தட்டுபவர்களுக்குக் கொடை

இறைவேண்டல் பற்றி இயேசு அளித்த போதனைகளையும், அவரே பல முறை மணிக்கணக்கில் இறைவேண்டலில் செலவிட்டதையும் புனித லூக்கா பதிவுசெய்திருப்பதைக் பார்த்தோம். மனித வாழ்வை எடுத்துக்கொள்வோம். தங்களுக்குத் தேவையானவற்றைத் தம் பெற்றோரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்கள் பிள்ளைகள். அதேபோல் பிள்ளைகளுக்குப் பார்த்துப் பார்த்து நல்லது செய்யவே பெற்றோரும் விரும்புகின்றனர்.

அப்படியிருக்கும்போது நம்மையும் உலகையும் படைத்த கடவுளாகிய தந்தை தன்னை அண்டி வந்து அவரது இதயக்கதவைத் தட்டுகிறவர்களுக்கு தூய ஆவி எனும் அற்புதக் கொடையை அவர் வழங்குவார் என்கிறார் இறைமகனாகிய இயேசு.பெற்றோரியம் அண்டி நிற்கும் பிள்ளைகளைப்போலக் கடவுளை நாம் அண்டிச் சென்று நமக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என இயேசு கற்பிக்கிறார்.

கடவுளிடம் நாம் கேட்பவை எல்லாம் எப்போதும் நாம் கேட்டபடியே கிடைத்துவிடும் என்று கூற முடியாது. ஆனால் கடவுள் நமக்குத் தம் நற்கொடைகளையே தருவார் என்பது மட்டும் உறுதி. அதாவது நாம் கடவுளிடம் கேட்பது நமக்குக் கைகூடாவிட்டாலும் ஒன்றை மட்டும் உறுதியாக நமக்கு அவர் அளிக்கப்பார். அந்த நற்கொடையின் பெயர் ' “தூய ஆவி''. இதைத்தான் தெளிவாகப் போதித்துள்ளார்இயேசு. “விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பார்'' என்று அவர் நமக்குக் கூறியது வியப்பாக இருக்கலாம். நாம் கேட்கும் மன்றாட்டு எதுவாக இருந்தாலும் கடவுள் நமக்குத் “தூய ஆவியை''க் கொடுப்பார் என்பதன் பொருள் என்ன?

தூய ஆவி என்பது கடவுளிட மிருந்து நமக்கு வழங்கப்படுகின்ற கொடை. கடவுள் நம்மோடு தங்கியிருந்து நம்மை அன்போடு வழிநடத்துகிறார் என்பதற்கு அவர் நமக்கு வழங்குகின்ற தூய ஆவியே சான்று. கடவுளிடமிருந்து வருபவர் தூய ஆவி; அவரே கடவுளாகவும் இருக்கிறார். எனவே, நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உறுதியாகத் தூய ஆவி வழங்கப்படும்.

கடவுள் வழங்கும் தூய ஆவியானவர் நம்மில் ‘வல்லமையோடு செயலாற்றுபவர். நம்மை உண்மை வழியில் இட்டுச் செல்பவர். நன்மை தீமையை வேறுபடுத்தி உணர நமக்குச் சக்தியைத் தருபவர். எனவே தூயஆவியைப் பெற்றுக்கொண்டபிறகு நீங்கள் தட்டும் கதவுகள் இரும்புக்கோட்டையாக இருந்தாலும் திறக்கும்.

எனவே இறைவேண்டல் என்பது நம் தனிப்பட்ட தேவைகளைக் கடவுளிடம் கேட்டுக்கெஞ்சுவது எனும் குறுகிய கண்ணோட்டத்தில் சுருங்கிவிடக் கூடாது. தூய ஆவியைத் தரும்படி நாம் பரலோகத் தந்தையிடம் கெஞ்சுவதே சரியான ஜெபம். நமது இறை வேண்டலில் இயேசுவின் முன்மாதிரியைக் கடைப்பிடிக்கலாம். அப்போது “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்''.

SCROLL FOR NEXT