அமாவாசையில் முன்னோர் ஆராதனையை அவசியம் செய்யவேண்டும். இதனால் இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கும். வம்சம் விருத்தியாகும். தலைமுறை கடந்தும் நம் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அமாவாசை என்பது மிக மிக முக்கியமான நாள். அமாவாசை என்பது பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களுக்கான நாள். பொதுவாகவே நம் முன்னோர்களுக்கு உரிய நாள் என்று சாஸ்திரம் வரையறுத்திருக்கிற விஷயங்களில் அமாவாசை என்பது மிக மிக முக்கியமானது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு அவர்களை வணங்கி வழிபடுவதற்கும் ஏராளமான நாட்கள் இருக்கின்றன. ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உள்ளன என்றும் அவற்றை முறையே செய்து வந்து, பித்ருக்களுக்கான கடமையைச் செய்பவர்களுக்கு பித்ரு தோஷம் அனைத்தும் நீங்கிவிடும். பித்ரு சாபம் முதலானவற்றில் இருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம்.
மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பிறப்பு, கிரகண காலங்கள், முன்னோர்களுக்கான திதி காலம், புரட்டாசி மாதத்தின் மகாளயபட்ச பதினைந்து நாட்கள் என்று மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும், முன்னோர் ஆராதனை செய்யவேண்டும் என அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.
அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது சிறப்பும் மகத்துவமும் மிக்கது. நம் முன்னோர்களின் பெயர்களையும் கோத்திரத்தையும் சொல்லி அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். அதேபோல, முன்னோரின் படங்களுக்கு சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். பூக்களால் அலங்கரிக்க வேண்டும். துளசி மாலை சார்த்துவதும் விசேஷ பலன்களைக் கொடுக்கவல்லது.
முன்னோர் வழிபாட்டில், நைவேத்தியம் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. அமாவாசை நாளில், நம்மால் முடிந்த உணவுகளைச் செய்து, முன்னோர்களுக்குப் படையலிட வேண்டும். படையலிட்ட உணவை, காகத்துக்கு வழங்க வேண்டும். அதன் பின்னரே உணவருந்த வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முக்கியமாக, அமாவாசை நாளில், முன்னோரை வணங்கும் போது, குடும்பத்தினர் மொத்தபேரும் சேர்ந்து வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் நமஸ்கரிப்பதும் மகத்தான ஆசீர்வாத்தையும் பலன்களையும் தந்தருளும். குளிர்ந்து மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்கள் முன்னோர்கள் என்பது உறுதி.
நாளைய தினம் திங்கட்கிழமை 14ம் தேதி அமாவாசை. இந்தநாளில், முன்னோர் வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள். பித்ரு ஆராதனையை அவசியம் செய்யுங்கள். எள்ளும் தண்ணீரும் கொண்டு அவர்களைப் பெயர்களைச் சொல்லி விடுவது மகா புண்ணியம்.
இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கும். இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.